10 ஆண்டுகள் ஆகியும் முடிவடையாத பாதாள சாக்கடை திட்டப் பணிகள்

திருவொற்றியூர் மேற்கு பகுதியில் 10 ஆண்டுகள் ஆகியும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் இன்னும் முடிவடையாமல் இருப்பதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

Update: 2017-12-18 23:00 GMT

திருவொற்றியூர்,

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்துக்கு உட்பட்ட 3 முதல் 7 வரையிலான 5 வார்டுகளில் சுமார் 50 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. இங்கு தனியார் நிறுவன தொழிலாளர்கள், கூலித் தொழிலாளிகள் அதிகமாக வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் பாதாள சாக்கடை வசதி இல்லை என்பதால் கடந்த 2007–ம் ஆண்டு மே 7–ந்தேதி அப்போதைய தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் ரூ.88 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கும் பணியை திருவொற்றியூர் நெய்தல் நகரில் தொடங்கி வைத்தார்.

சுமார் 18 மாத காலத்திற்குள் பாதாள சாக்கடை அமைக்கும் பணி முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரவேண்டிய நிலையில் 10 ஆண்டுகள் ஆகியும் இதுவரை பணிகள் முடியவில்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

இது குறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

பல்வேறு காரணங்களால் தடை

திருவொற்றியூர் மேற்கு பகுதியில் இன்னும் சில இடங்களில் பாதாள சாக்கடை குழாய்கள் அமைக்கப்படவில்லை. கடலோரப்பகுதியில் பள்ளம் தோண்டும் போது மண் சரிவு ஏற்படுகிறது. பல இடங்களில் பணி செய்ய விடாமல் நீதிமன்றம் மூலம் தடை உத்தரவு பெறப்பட்டு உள்ளது.

ஒப்பந்ததாரர்கள் கூடுதலாக பணம் கேட்டு பணிகளை செய்யாமல் வேண்டும் என்றே காலதாமதப்படுத்துவது, மழை வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 10 ஆண்டுகளாக பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் முடிவடையாமல் இழுத்துக்கொண்டே போகின்றது. பல தடைகளை தாண்டி விரைவில் பணிகள் முடிவடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கொசு உற்பத்தி

பாதாள சாக்கடை அமைக்கும் பணிக்காக 5 வார்டுகளில் உள்ள நெய்தல் நகர், எர்ணாவூர், முருகப்பாநகர், சுப்பிரமணியம் நகர், ராஜாசண்முகபுரம் ஆகிய 5 இடங்களில் பாதாள சாக்கடை கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றது. இங்கு பல இடங்களில் 80 சதவீத பணிகள் முடிந்து விட்ட நிலையில் மணலி பேசின் சாலையில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள் வேகமாக நடைபெறாததால் பாதாள சாக்கடை குழாய்கள் அமைக்கப்பட்ட பகுதிகளில் வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது.

இதனால் பல இடங்களில் பாதாள சாக்கடை குழாயினுள் மழைநீருடன் கழிவுநீரும் தேங்கி நிற்கின்றது. இதனால் அந்த இடங்களில் துர்நாற்றம் வீசுவதுடன் கொசு உற்பத்தியாகி பல்வேறு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் பல இடங்களில் குட்டை போல் பாதாள சாக்கடைநீர் பல ஆண்டுகளாக தேங்கி கிடப்பதால் நிலத்தடி நீர் கெட்டு குளிப்பதற்கு கூட பயன்படாத நிலை உள்ளது.

பாதாள சாக்கடை இன்னும் அமைக்கப்படாததால் வீடுகளில் இருந்து கழிவுநீரை லாரிகளில் ஏற்றிச்சென்று கடலோரத்தில் விடப்படுகிறது. இதனால் கடல் நீர் மாசுபடுகிறது. மேலும் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.

விரைந்து முடிக்க கோரிக்கை

அதே போன்று மழை காலங்களில் கழிவுநீருடன் மழைநீர் தேங்கி தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுவதால் அங்கு வசித்து வருபவர்கள் வீடுகளை பூட்டி விட்டு வெளியேறி செல்லும் அவல நிலையும் உள்ளது. பல இடங்களில் குட்டை போல் கழிவு நீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும், பள்ளி மாணவ–மாணவிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

எனவே பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினரும், பொது மக்களும் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஆனாலும் தொடர்ந்து பணிகள் மந்த கதியில் நடைபெற்று வருகின்றது.

பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து நிறைவேற்றுவதுடன், திருவொற்றியூர் மேற்கு பகுதி மக்களின் அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றி கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

--–

மணலி பேசின் சாலையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு உள்ளதை படத்தில் காணலாம்.

--–

நெய்தல் நகரில் அமைக்கப்பட்டு உள்ள பாதாள சாக்கடை கிணறுகள்.

--–

நெய்தல் நகரில் கழிவுநீர் தேங்கி நிற்கும் காட்சி.

=–=–=

சென்னை மட்டும் 36 பாயிண்ட்

மேலும் செய்திகள்