சத்தியமங்கலத்தில் நள்ளிரவில் பரபரப்பு வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த 3 மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிப்பு

சத்தியமங்கலத்தில் வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த 3 மோட்டார்சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

Update: 2017-12-18 21:30 GMT

சத்தியமங்கலம்,

சத்தியமங்கலம் வாணியர் வீதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகே வசித்து வருபவர் ஹரிஹரன் (வயது 26). இவர் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு செல்போன் கடையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இதேபோல் அதே பகுதியை சேர்ந்தவர்கள் ஆனந்த் (33), சிதம்பர மூர்த்தி (30). இதில் ஆனந்த் ஓட்டல் தொழிலாளியாகவும், சிதம்பர மூர்த்தி புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள தனியார் மில்லில் ஊழியராகவும் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுடைய மோட்டார்சைக்கிளை வீட்டின் உள்ளே நிறுத்த வசதி கிடையாது. இதனால் இவர்கள் தங்களுடைய மோட்டார்சைக்கிளை வீட்டுக்கு வெளியே தெருப்பகுதியில் நிறுத்துவது வழக்கம்.

அதன்படி நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் ஹரிஹரன், ஆனந்த், சிதம்பர மூர்த்தி ஆகியோர் தங்களுடைய வீட்டின் முன்பு மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு தூங்க சென்று விட்டனர்.

இந்த நிலையில் நள்ளிரவில் ஹரிஹரனின் மோட்டார்சைக்கிளில் இருந்து திடீரென கரும்புகை வந்தது. பின்னர் தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. பின்னர் தீ பரவி ஹரிஹரன் வீட்டில் இருந்து மீட்டர் பெட்டியிலும் பற்றியது. உடனே மீட்டர் பெட்டி எரிய தொடங்கியதுடன், மின்சாரம் தடைப்பட்டது. இதனால் நன்றாக அயர்ந்து தூங்கி கொண்டிருந்த ஹரிஹரன் விழித்து எழுந்து வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்சைக்கிள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்ததை கண்டதும் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மோட்டார்சைக்கிளில் பற்றிய தீயை அணைத்தார். எனினும் இந்த தீ விபத்தில் மோட்டார்சைக்கிளில் எரிந்து நாசம் ஆனது.

இதேபோல் ஆனந்த் மற்றும் சிதம்பர மூர்த்தியின் மோட்டார்சைக்கிளும் தீப்பிடித்து எரிந்து நாசம் ஆனது. இதுகுறித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ வைத்தது யார்? எதற்காக தீ வைத்தார்கள்? ஏன் ஒரே நேரத்தில் 3 மோட்டார்சைக்கிளுக்கும் தீ வைத்தார்கள்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஒரே நேரத்தில் ஒரே பகுதியை சேர்ந்த 3 பேர்களின் மோட்டார்சைக்கிள் தீப்பிடித்து எரிந்து நாசம் ஆனதால் சத்தியமங்கலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்