கள்ளக்குறிச்சி அருகே வி‌ஷம் குடித்த மாணவி பள்ளியில் மயங்கி விழுந்து சாவு போலீசார் விசாரணை

சின்னசேலம் அருகே வி‌ஷம் குடித்த பிளஸ்–2 மாணவி பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

Update: 2017-12-18 21:45 GMT

சின்னசேலம்,

சின்னசேலம் அருகே வி‌ஷம் குடித்த பிளஸ்–2 மாணவி பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவரது தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அருகே உள்ள வானவரெட்டி கிழக்கு காட்டுக்கொட்டாயை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ராமர் (வயது 46). இவரது மகள் சூர்யா(17). இவர் பெரிய சிறுவத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று காலை வீட்டில் யாரும் இல்லாத போது சூர்யா வி‌ஷத்தை எடுத்து குடித்து விட்டார். பின்னர் பள்ளிக்கூடத்துக்கு புறப்பட்டு சென்றார். பள்ளிக்கூட வளாகத்துக்குள் சென்ற போது சூர்யா மயங்கி விழுந்தார்.

உடனே அங்கிருந்த ஆசிரியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு சூர்யா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ராமர் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் தனது மகள் சூர்யாவுக்கு சிறு வயதில் இருந்தே இருதய நோய் இருந்து வந்ததாகவும், அதனால் மனமுடைந்து வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறியிருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சூர்யா உடல்நலக் கோளாறு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்