பிரதமர் மோடி முன்பு, சித்தராமையா ஒரு குழந்தை எடியூரப்பா தாக்கு

பிரதமர் மோடி முன்பு சித்தராமையா ஒரு குழந்தை போன்றவர் என்று எடியூரப்பா கடுமையாக தாக்கி பேசினார்.

Update: 2017-12-17 23:54 GMT

பெங்களூரு,

கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா மாற்றத்திற்கான பயணத்தை கடந்த நவம்பர் மாதம் 2–ந் தேதி பெங்களூருவில் தொடங்கினார். 75 நாட்கள் இந்த பயணத்தை அவர் மேற்கொண்டு வருகிறார். ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று பொதுக்கூட்டம் நடத்தி மக்களை சந்தித்து வருகிறார். இந்த நிலையில் பெங்களூரு சி.வி.ராமன் நகர் தொகுதியில் நேற்று மாற்றத்திற்கான பயண பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் கலந்து கொண்டார். இதில் எடியூரப்பா பேசியதாவது:–

தன்னை கண்டால் மோடிக்கு பயம் என்று சித்தராமையா சொல்கிறார். மோடியின் முன்பு சித்தராமையா ஒரு குழந்தை. சித்தராமையாவை பார்த்து மோடி பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. சித்தராமையா தனது ஆட்சியை ‘காம் கி பாத்’(சாதனைகள் நிறைந்த ஆட்சி) என்று பெருமையாக சொல்கிறார். அது ‘காம் கி பாத்’ அல்ல, ‘லூடி பாத்’(கொள்ளை ஆட்சி). வெளிநாடுகளின் தலைவர்களே மோடியின் ஆட்சித்திறனை பாராட்டி இருக்கிறார்கள்.

பிரதமர் மோடி பற்றி சித்தராமையா தரக்குறைவாக விமர்சிப்பது சரியல்ல. பிரதமர் மோடி, கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோரின் வழிகாட்டுதல்படி கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும். 150–க்கும் அதிகமான தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறும். சித்தராமையாவின் ஆட்சியில் பெங்களூருவின் பெருமை பாழாகிவிட்டது.

பூங்கா நகரம், சிலிக்கான் பள்ளத்தாக்கு என்ற பெயர்கள் போய் இப்போது குப்பை நகரம், கற்பழிப்பு நகரமாக பெங்களூரு மாறிவிட்டது. குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இந்த மாற்றத்திற்கான பயணம் இதுவரை 112 தொகுதிகளுக்கு சென்றுள்ளது. எல்லா தொகுதிகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

கர்நாடகத்தில் மாற்றத்திற்காக மக்கள் காத்திருக்கிறார்கள். கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் நேர்மையான, ஊழலற்ற தூய்மையான ஆட்சி நிர்வாகத்தை வழங்குவோம். புதிய கர்நாடகத்தை, புதிய பெங்களூருவை உருவாக்குவோம். அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்வோம்.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

மேலும் செய்திகள்