சிக்கனமாக செலவு செய்தால் அரசு திட்டங்களை அனுமதிப்பேன் கிரண்பெடி பேட்டி
நிதி நெருக்கடி இருப்பதால் முறைகேடுகளுக்கு இடம் கொடுக்காமல் நிதியை சிக்கனமாக செலவு செய்தால் அரசு திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று கவர்னர் கிரண்பெடி தெரிவித்தார்.
திருபுவனை,
கவர்னர் கிரண்பெடி புதுவையில் இருக்கும்போது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நகரம் மற்றும் கிராமப் புறங்களில் ஆய்வு மேற்கொள்வது வழக்கம். கவர்னர் மாளிகையில் மக்கள் தெரிவிக்கும் புகார்களின் அடிப்படையில் கவர்னர் கிரண்பெடி இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் திருவண்டார்கோவில், திருபுவனை ஆகிய பகுதிகளில் உள்ள ஏரியை தூர்வார வேண்டும். கலிதீர்த்தாள்குப்பத்தில் உள்ள தொகுப்பு வீடுகள் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளன. சன்னியாசிக்குப்பம் அரசு பள்ளியில் அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என திருபுவனை தொகுதி மக்கள் கவர்னர் கிரண்பெடிக்கு புகார் தெரிவித்தனர். என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான கோபிகாவும் இதே கோரிக்கை குறித்து கவர்னருக்கு புகார் மனு அனுப்பினார்.
இதையொட்டி ஆய்வு பணிக்காக திருபுவனை தொகுதியான திருவண்டார்கோவிலுக்கு நேற்று கவர்னர் கிரண்பெடி சென்றார். தொழிலாளர் துறை இயக்குனர் வல்லவன், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் சென்றனர். கிரண்பெடியை தொகுதி எம்.எல்.ஏ.வான கோபிகா, கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சீத்தாராமன், போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் ஆகியோர் வரவேற்றனர்.
அதனைதொடர்ந்து திருவண்டார்கோவில் ஏரியை கிரண்பெடி பார்வையிட்டார். அப்போது 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் ஏரியை தூர்வாரவும், ஏரியை சுற்றி மரக்கன்றுகள் நடவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஏரி தூர்வாரப்பட்ட நிலையில் அதற்கான தொகை ரூ.6¾ லட்சத்தை அரசு வழங்கவில்லை என கிரண்பெடியிடம் அங்கிருந்த ஒப்பந்ததாரர்கள் புகார் தெரிவித்தனர். அந்த நிதியை வழங்க நடவடிக்கை எடுப்பதாக கவர்னர் உறுதி அளித்தார். ஏரி முழுவதும் தூர்வாரி ரூ.10 லட்சம் செலவில் இரும்பு முள்வேலி அமைக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரட்டார்.
கலிதீர்த்தாள்குப்பத்தில் தொகுப்பு வீடுகள் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் அந்த வீடுகளை கவர்னர் கிரண்பெடி பார்வையிட்டார். அங்கு முறைகேடுகள் நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் ஆதிதிராவிடர் நலத்துறையிடம் விளக்கம் கேட்கப்படும். அந்த அறிக்கையின்படி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிரண்பெடி தெரிவித்தார்.சன்னியாசிக்குப்பம் அரசு பள்ளிக்கு சென்று அவர் பார்வையிட்டார். அந்த பள்ளிக்கு அடிப்படை வசதிகளை செய்து தரவும், சுற்றுசுவர் கட்டவும், தொண்டு நிறுவனம் மூலம் மாணவர்களுக்கு கழிவறை வசதி செய்து தரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதன்பின் ஆய்வை முடித்துக்கொண்டு அங்கிருந்து கவர்னர் மாளிகைக்கு கிரண்பெடி புறப்பட்டார். அப்போது அவரிடம் நிருபர்கள் ‘தீபாவளி பண்டிகைக்கு இலவச சர்க்கரை, வேட்டி–சேலை வழங்கப்படவில்லை. அதுபோல் பொங்கல் பண்டிகைக்கு அரசால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் இலவச பொங்கல் பொருட்கள் நிறுத்தப்படுமா?’ என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த கிரண்பெடி, அரசு நிதி நெருக்கடியில் இருக்கிறது. முறைகேடுகள் இடம் கொடுக்காமலும், நிதியை சிக்கனமாகவும் செலவழித்தால் அரசு திட்டங்களுக்கு அனுமதி அளிப்பேன். அதுபோல் பொங்கல் பண்டிகைக்கு இலவச பொங்கல் பொருட்கள் வழங்க குறைந்த தொகையை ஒதுக்கீடு செய்ய கோரினால் அந்த கோப்புக்கு ஒப்புதல் அளிப்பேன்’ என்று தெரிவித்தார்.