தரமற்ற மருந்துகளை வெளிநாட்டுக்கு அனுப்பிய வழக்கு: மருந்து நிறுவன இயக்குனர் கைது
தரமற்ற மருந்துகளை வெளிநாட்டுக்கு அனுப்பிய வழக்கில் மருந்து நிறுவன இயக்குனர் கைது செய்யப்பட்டார்.
மும்பை,
மும்பையில் உள்ள ஒரு மருந்து நிறுவனம் சார்பில் இஸ்ரேல் நாட்டிற்கு மருந்துகள் அனுப்பப்பட்டு வந்தன. அந்த நிறுவனம் தரமற்ற மருந்துகளை புனேயில் உள்ள ஒரு பிரபல மருந்து நிறுவனத்தின் லேபிள்களை பயன்படுத்தி இஸ்ரேல் நாட்டிற்கு அனுப்பி மோசடியில் ஈடுபட்டு வந்தது கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த மோசடி நிறுவனத்தின் இயக்குனராக இருந்த டாக்டர் ரன்வீர் சிங்கின் கூட்டாளி சுதிர் சிங் என்பவரை கைது செய்தனர். ரன்வீர் சிங் தலைமறைவாகி விட்டார். போலீசார் அவரை வலைவீசி தேடிவந்தனர்.
இந்தநிலையில், அவர் அந்தேரியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நேற்று முன்தினம் அந்த ஓட்டலுக்கு சென்று ரன்வீர் சிங்கை அதிரடியாக கைது செய்தனர்.