ஜாக்டோ- ஜியோ கிராப் கூட்டமைப்பு சார்பில் ஆசிரியர், அரசு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

ஜாக்டோ-ஜியோ கிராப் கூட்டமைப்பு சார்பில் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2017-12-17 23:00 GMT
திருச்சி,

திருச்சி தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை திடலில் நேற்று ஜாக்டோ-ஜியோ கிராப் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. உண்ணாவிரத போராட்டத்துக்கு மதி(அரசு அலுவலர் ஒன்றியம்), நீலகண்டன் (தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி), குமார வேல் (பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம்) ஆகியோர் தலைமை தாங்கினார்கள். வெள்ளாந்துரை முன்னிலை வகித்தார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் ரெங்கராஜன் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். பால்வளத்துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் ஜெயபாலன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

கோரிக்கை

1-4-2003 முதல் பணி நியமனம் செய்யப்பட்ட அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திடவேண்டும், ஆறாவது ஊதிய குழுவில் ஊதிய முரண்பாடுகள் களையப்பட்ட பின்னர் திருத்திய ஊதிய மாற்றம் செய்யப்படவேண்டும், தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு ஊதிய குழு நிலுவை தொகையினை 1-1-2016 முதல் பணப்பயனாக வழங்கவேண்டும், மத்திய அரசு ஊதியக்குழு பரிந்துரைகளில் குறைந்த பட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரம் அறிவித்தது போல் தமிழக அரசு அலுவலர்களுக்கும் குறைந்த பட்ச ஊதியம் ரூ.15 ஆயிரத்து 700 என இருப்பதை மாற்றி ரூ.18 ஆயிரமாக வழங்கவேண்டும் என்பது உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடைபெற்றது. முன்னதாக கலியமூர்த்தி வரவேற்று பேசினார். முடிவில் ரவிச்சந்திரன் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்