அனுமன் ஜெயந்தியையொட்டி ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து 8 வடை மாலை சாற்றப்பட்டது

அனுமன் ஜெயந்தியையொட்டி திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து 8 வடைமாலை சாற்றப்பட்டது. பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

Update: 2017-12-17 22:30 GMT
திருச்சி,

திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து மூலவர் சன்னதியிலும் உற்சவருக்கும் ஒரு லட்சத்து 8 வடை மாலைகளும், பத்தாயிரத்து 8 ஜாங்கிரி மாலைகளும் சாற்றப்பட்டது.ஒரு லட்சத்து 8 வடைமாலை மற்றும் 10 ஆயிரத்து 8 ஜாங்கிரி மாலை அலங்காரத்தில் இருந்த ஆஞ்சநேயரை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து அர்ச்சனைக்காக ஏற்கனவே பணம் கட்டியவர்களுக்கு வடை மற்றும் ஜாங்கிரி மாலை பிரசாத பைகள் கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது. நேற்று இரவு ஆஞ்சநேயர் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயர் கோவில் முன்பாக திருப்பதி வெங்கடாஜலபதி மற்றும் ஆஞ்சநேயர் உருவங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. கோவில் வளாகம் முழுவதும் ஏராளமான மலர்கள் மற்றும் கரும்புகளாலும் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. பக்தர்களுக்கு யானையும் ஆசீர்வாதம் வழங்கியது.

சஞ்சீவி ஆஞ்சநேயர்

இதே போல் திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலிலும் நேற்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு பத்தாயிரத்து 8 வடை மாலையால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 

மேலும் செய்திகள்