ஜெயின் சமூக தொழில் அதிபரின் 19 வயது மகன் துறவறம் பூண்டார்

கோவையில் ஜெயின் சமூகத்தை சேர்ந்த தொழில் அதிபரின் 19 வயது மகன் துறவறம் பூண்டார். அவரை குதிரைகள் பூட்டிய வண்டியில் ஊர்வலமாக அழைத்துச்சென்றனர்.;

Update: 2017-12-17 22:45 GMT
கோவை,

கோவை சொக்கம்புதூர் பகுதியை சேர்ந்தவர் மனோஜ்ஜெயின். தொழில் அதிபர். இவருடைய மகன் நிமிட்ஸ் (வயது 19). பிளஸ்-2 படித்துள்ளார். இவர் ஜெயின் சமூக வழக்கப்படி குருகுல கல்வி பயில விரும்பி உள்ளார்.

இதைத்தொடர்ந்து அவர் குஜராத் மாநிலம் சூரத்தில் குருகுல கல்வியில் பட்டம் பெற்று கோவை திரும்பினார். அவர் துறவறம் மேற்கொள்ள உள்ளதையொட்டி கோவை ரெங்கேகவுடர் வீதியில் உள்ள சுபாஸ்நாதம் கோவிலில் இருந்து நேற்று ஊர்வலம் நடைபெற்றது.

அப்போது, குதிரைகள் பூட்டி அலங்கரிக்கப்பட்ட வண்டியில், நிமிட்ஸ் உட்கார வைக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார். ஜெயின் கோவில் சந்திரஜித்விஜய் சூரி மகராஜ் ஆச்சார்யா நிகழ்ச்சியை நடத்தினார். ஊர்வலத்துக்கு முன்னதாக ஆதிநாத் சுவாமி, தேரில் கொண்டு செல்லப்பட்டார்.

அதற்கு பின்னால் நிமிட்ஸ் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். அப்போது ஜெயின் சமூக பெண்கள் பாடல்களை பாடியபடி சென்றனர். இந்த ஊர்வலம் சுக்கிரவார்பேட்டை, ஏ.கே.என்.நகர், பொன்னையராஜபுரம் வழியாக சொக்கம்புதூரில் உள்ள ஜீராவாலாபாரஸ்நாத் கோவிலை வந்தடைந்தது.

ஊர்வலம் சென்ற பாதையில் உள்ள தெருக்களை ஜெயின் சமூக பெண்கள் சுத்தம் செய்தபடி சென்றனர். மேலும் ஊர்வல பாதையில் பால், தண்ணீர் தெளிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான ஜெயின் சமூக ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். அந்த கோவிலில் 6 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நாளை (செவ்வாய்க்கிழமை) சூரத் செல்லும் நிமிட்ஸ், வருகிற 27-ந் தேதி ஜெயின் சம்பிரதாயப்படி துறவறம் ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அவருடன் 150 பேர் துறவிகள் ஆகிறார்கள்.

ஜெயின் சமூகத்தின் சம்பிரதாயப்படி, துறவறம் பூண்ட பிறகு சொகுசு வாழ்க்கை வாழக்கூடாது. குளிர்சாதன வசதி, செல்போன் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது. வீட்டில் தங்க கூடாது. கோவிலில் தான் தங்க வேண்டும். ஆடம்பர உடைகள் அணிய கூடாது. தர்மம் எடுத்து சாப்பிட வேண்டும். கையில் குச்சியை வைத்து கொண்டுதான் நடமாட வேண்டும் என போன்ற கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும்.

கோவையில் ஜெயின் சமூகத்தை சேர்ந்த பெண்கள் தான் இதுவரை துறவறம் பூண்டுள்ளனர். தற்போது 19 வயது கோடீஸ்வர வாலிபர் துறவறம் பூண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்