அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில் வெடிமருந்து வீசுவதால் செத்து மிதக்கும் மீன்கள்

அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில் வெடிமருந்து வீசுவதால் மீன்கள் செத்து மிதக்கின்றன.

Update: 2017-12-17 23:00 GMT

அந்தியூர்,

அந்தியூர் அருகே வரட்டுப்பள்ளம் அணை உள்ளது. பர்கூர் மலைப்பகுதியில் பெய்யும் மழை மூலம் அணைக்கு தண்ணீர் வரும். அணையில் ஆண்டுதோறும் தண்ணீர் இருப்பதால் மீன்வளத்துறையின் மூலம் மீன்கள் வளர்க்கப்படும். அவற்றை பிடிப்பவர்கள் பொதுமக்களுக்கு மிகவும் குறைந்த விலையில் மீன்கள் விற்பனை செய்து வந்தனர்.

கடந்த மாதம் பர்கூர் மலைப்பகுதியில் பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது. அதிக தண்ணீர் இருந்ததால் மீன்வளத்துறையினர் மீன்களை பிடிக்கவில்லை. மேலும் மார்கழி மாதத்தில் மீன்கள் இனப்பெருக்க காலம் என்பதால் மீன் பிடிப்பதை நிறுத்தி விடுவார்கள்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் சிலர் இரவு நேரங்களில் அணைப்பகுதிக்கு சென்று வெடி மருந்து வீசி மீன்களை கொன்று அவற்றை சேகரித்து எடுத்து செல்கிறார்கள். அதனால் அணையில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன என்று மீன்வளத்துறையினர் தெரிவித்தார்கள்.

இதுகுறித்து வன ஆர்வலர்கள் கூறும்போது, ‘அணையை சுற்றிலும் வனப்பகுதி உள்ளதால் வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகளுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளதால் வனவிலங்குகள் வெடிமருந்தின் தண்ணீரை குடித்தால் அவற்றுக்கு ஆபத்து நேரிடும். எனவே வனவிலங்குகளுக்கு ஆபத்து நேராமல் பாதுகாக்க வரட்டுப்பள்ளம் அணையில் வெடிவைத்து மீன் பிடிப்பதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என்றனர்.

மேலும் செய்திகள்