திருப்பரங்குன்றம் அருகே குழாய்கள் உடைந்து வைகை குடிநீர் வீணாகும் அவலம்

திருப்பரங்குன்றம் அருகே 3 இடங்களில் குழாய்கள் உடைந்து வைகை குடிநீர் வீணாகி செல்கிறது. அதை உடனடியாக சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2017-12-17 22:30 GMT
திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தென்பழஞ்சி பஸ் நிலையம் அருகே ரோட்டின் ஓரத்தில் செல்லக் கூடிய வைகை கூட்டு குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் ரோடு பகுதி முழுவதுமாக தண்ணீர் தேங்கி குளமாகி வருகிறது. இதே போல வேடர்புளியங்குளம் கண்மாய்க்குள் சிறு பாலத்தின் அருகே உள்ள குழாய் உடைந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இது தவிர தனக்கன்குளம் கண்மாய் மடை அருகே உள்ள குழாய் உடைந்ததால் வைகை குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் இந்த பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு, பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும். அதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் குடிநீர் வீணாகி வருவதோடு, அந்த பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அவலநிலை உருவாகி வருகிறது.

வலியுறுத்தல்

இதுகுறித்து தென்பழஞ்சி பகுதி மக்கள் கூறியதாவது:- ஊருக்குள் ஏராளமான குழாய்கள் போடப்பட்டு உள்ளன. ஆனால் அதில் குடிநீர் வருவதில்லை. காரணம் வைகை குடிநீர் பிரதான குழாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் வீணாகி குடியிருப்பு பகுதியில் உள்ள குழாய்களில் தண்ணீர் வருவதில்லை.

இதனால் தென்பழஞ்சியில் குடிநீர் தட்டுப்பாட்டால் அவதிக்குள்ளாகி வருகிறோம். மேலும் உடைந்த குழாய்களை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

மேலும் செய்திகள்