மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்துக்கு 2-ம் கட்டமாக தண்ணீர் திறப்பு

மேட்டூர் அணையில் இருந்து 2-ம் கட்டமாக கால்வாய் பாசனத்துக்கு நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது.

Update: 2017-12-17 23:00 GMT
மேட்டூர்,

மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்துக்காக ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் தண்ணீர் திறப்பது வழக்கம். இந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் அணையின் நீர்மட்டம் குறைவாக இருந்ததால் குறித்த நேரத்தில் தண்ணீர் திறக்கப்படவில்லை.

இந்த நிலையில் கடந்த மாதம் 17-ந் தேதி கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவில், 13 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடவும், பின்னர் 13 நாட்களுக்கு தண்ணீரை நிறுத்தி விட்டு மீண்டும் தண்ணீர் திறப்பது என்று 4 கட்ட தண்ணீர் திறக்கும் முறைபாசன நடைமுறையை தமிழக அரசு அறிவித்து இருந்தது.

தண்ணீர் திறப்பு

அதன்படி 2-ம் கட்டமாக நேற்று காலையில் வினாடிக்கு 300 கனஅடி வீதம் மேற்கு மற்றும் கிழக்கு கால்வாய் பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பாசனத்தேவைக்கு ஏற்றவாறு தண்ணீர் திறப்பை வினாடிக்கு 1,000 கனஅடி வரை படிப்படியாக அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 481 கனஅடியாக குறைந்துள்ள நிலையில், டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்துக்காக வினாடிக்கு 9 ஆயிரத்து 300 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக நேற்று முன்தினம் 77.76 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 76.98 அடியாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்