முத்தூர்- கொடுமுடி ரோட்டில் காவிரி திட்ட குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

முத்தூர்-கொடுமுடி ரோட்டில் தனியார் பள்ளி அருகில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் வெளியேறி வீணாகிறது.

Update: 2017-12-17 22:30 GMT
முத்தூர்,

ஈரோடு மாவட்டம் கொடுமுடி காவிரி ஆற்று குடிநீர் நீரேற்றும் நிலையத்தில் இருந்து திருப்பூர் மாவட்டம் முத்தூர், காங்கேயம், வெள்ளகோவில், மூலனூர், தாராபுரம், குண்டடம் ஆகிய நகர மற்றும் கிராம ஊராட்சி பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முத்தூர்-கொடுமுடி ரோட்டில் தனியார் பள்ளி அருகில் மெயின் காலையோரத்தில் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு திடீரென்று உடைப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு இவ்வழியே வந்த கார் திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி குழாய் உடைப்பினால் ஏற்பட்ட பள்ளத்தில் உள்ளே இறங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரின் முன்புற சக்கரங்கள் 2-ம் பள்ளத்தில் இறங்கிவிட்டது. நல்ல வேளையாக இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த டிரைவர் எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினார்.

இந்த உடைப்பு ஏற்பட்ட குழாயில் இருந்து தற்போது வரை ஏராளமான குடிநீர் ஆற்று வெள்ளம்போல் ரோடுகளில் பெருக்கெடுத்து வெளியேறி வீணாகிறது. மேலும் குழாயில் இருந்து வெளியேறும் குடிநீர் சாலையோரத்தில் பரவலாக ஓடி கொடுமுடி ரோட்டில் செல்லும் சாக்கடை கால்வாயில் சென்று கலந்து வீணாகிறது. மேலும் உடைப்பு ஏற்பட்ட இந்த இடத்தில் குளம்போல் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.

மேலும் குழாய் உடைப்பினால் தார்சாலை நீரினால் அரிக்கப்பட்டு சாலையோரத்தில் ஒரு பெரிய பள்ளம் உருவாகியுள்ளது. அரசு மற்றும் தனியார் அலுவலர்கள், ஊழியர்கள், பணியாளர்கள், முதியோர்கள், பொதுமக்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் எதிர்பாராதவிதமாக இந்த குடிநீர் குழாய் உடைப்பு பள்ளத்தில் உள்ளே தவறி விழுந்து விடும் அபாயம் உள்ளது. மேலும் இந்த குடிநீர் குழாய் உடைப்பினால் காங்கேயம், வெள்ளகோவில், மூலனூர் பகுதிகளுக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக துரித நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மூலம் முத்தூர்- கொடுமுடி ரோட்டில் ஏற்பட்டுள்ள காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்