ஆச்சரியப்படுத்தும் அழகு பெண்மணி

நிஷ்ரின் பாரிக்கு வயது 51. கட்டுடல் அழகை வெளிப்படுத்தும் பாடிபில்டிங் போட்டியில் பங்கேற்று அசத்திக்கொண்டிருக்கிறார்.;

Update: 2017-12-17 07:53 GMT
நிஷ்ரின் பாரிக்கு வயது 51. கட்டுடல் அழகை வெளிப்படுத்தும் பாடிபில்டிங் போட்டியில் பங்கேற்று அசத்திக்கொண்டிருக்கிறார். ஆசியன் பாடிபில்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற வயதான பெண்மணி என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார். கட்டுடல் அழகை பராமரிப்பதற்காக அவர் மேற்கொள்ளும் முயற்சிகளே இந்த வயதிலும் அவரை சுறுசுறுப்புடன் இயங்க வைக்கிறது.

நிஷ்ரின் 15 வயதில் கராத்தே பயிற்சி பெற்று பிளாக் பெல்ட் வாங்கியவர். தற்காப்பு கலைகளில் பயிற்சி பெற்றவர். உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதற்காக யோகாசனமும் கற்று தேர்ந்திருக்கிறார். மாணவர்களுக்கு பயிற்சி வழங்குவதோடு போட்டிகளில் பங்கேற்பதற்காக உடற்பயிற்சியிலும் தீவிர கவனம் செலுத்துகிறார்.

‘‘நான் தினமும் ஐந்து மணி நேரம் தூங்குகிறேன். ஐந்து மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறேன். மாணவர்களுக்கு 2 மணி நேரம் யோகாசன பயிற்சி வழங்குகிறேன். சில நேரங்களில் 10 மணி நேரம் கூட உடற்பயிற்சி செய்திருக்கிறேன்’’ என்று தன் கட்டுடல் அழகின் ரகசியத்தை வெளிப்படுத்துகிறார்.

நிஷ்ரின் திருமணத்திற்கு பிறகும், தாய்மை அடைந்த பிறகும் தற்காப்பு கலைகளில் பயிற்சி மேற்கொள்வதற்கு தடை ஏற்பட்டிருக்கிறது. எனினும் உடற்பயிற்சி மீதான மோகத்தை மட்டும் கைவிடவில்லை. 50 கிலோவுக்குள் உடல் எடையை தக்கவைப்பதிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

‘‘கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 56 கிலோ எடை இருந்தேன். இப்போது 46 கிலோவாக எடை குறைந்திருக்கிறேன். உணவும், உடற்பயிற்சியும்தான் உடல் எடையை தீர்மானிக்கும்’’ என்கிறார்.

நிஷ்ரினுக்கு இரு மகள்கள் இருக்கிறார்கள். இருவரும் 20 வயதை கடந்தவர்கள். பாடி பில்டிங் போட்டிகளில் தனது மகள் வயதுடைய போட்டியாளர்களுடன் கலந்து கொண்டு அவர்களே ஆச்சரியப்படும் அளவுக்கு கட்டுடல் கொண்ட பெண்மணியாக வலம் வருகிறார். ஏராளமான போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களும் வென்றிருக்கிறார். அழகி போட்டிகளிலும் கலந்து கொள்கிறார்.

‘‘ஒவ்வொரு நாளும் என்னை சிறப்பாக தயார்படுத்திக்கொண்டு போட்டிகளில் பங்கேற்க விரும்புகிறேன். சர்வதேச பாடிபில்டிங் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்க வேண்டும் என்பது என்னுடைய நோக்கம். பதக்கம் வாங்க வேண்டும் என்பது என்னுடைய ஆசையல்ல. இந்தியாவிலும் கட்டுடல் கொண்ட பெண் போட்டியாளர்கள் இருக்கிறார்கள் என்பது உலகின் கவனத்திற்கு வர வேண்டும். மற்ற பெண்களும் என்னை பார்த்து உடற்பயிற்சியில் கவனம் செலுத்த முன்வர வேண்டும் என்பதே என் நோக்கம்’’ என்கிறார்.

நிஷ்ரின் உணவு பழக்க வழக்கங்களிலும் கட்டுப்பாடுகளை பின்பற்றுகிறார். முட்டை, தானியங்கள், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றையே விரும்பி சாப்பிடுகிறார்.

‘‘ உடல்நலத்தை பராமரிக்காவிட்டால் மகிழ்ச்சியான வாழ்க்கையை இழக்க நேரிடும். அனைவருக்கும் நேரம் இருக்கிறது. அதனை முறையாக கையாள தெரிந்திருக்க வேண்டும். திறமைசாலிகள் தங்களது நேரத்தை முறையாக நிர்வகித்து அவசியமான தேவைகளுக்கு நேரம் ஒதுக்கிவிடுவார்கள். தினமும் ஒரு மணி நேரத்தையாவது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்காக செலவிட வேண்டும்’’ என்கிறார்.

நிஷ்ரின் மகள்கள் இருவரும் தாயை போலவே உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் கவனம் செலுத்துகிறார்கள். அதற்கு நிஷ்ரினின் அழகு ரகசியமே காரணம்.

மேலும் செய்திகள்