51 குழந்தைகளுக்கு அரவணைப்பு

குழந்தை இல்லாத விவசாய தம்பதியர் 51 அனாதை குழந்தைகளுக்கு வாழ்வளித்து கொண்டிருக்கிறார்கள்.

Update: 2017-12-17 07:32 GMT
குழந்தை இல்லாத விவசாய தம்பதியர் 51 அனாதை குழந்தைகளுக்கு வாழ்வளித்து கொண்டிருக்கிறார்கள். அந்த தம்பதியரின் பெயர் மீனா ரானா- வீரேந்தர் ரானா. இருவருக்கும் 1981-ம் ஆண்டு திருமணம் நடந்திருக்கிறது. மீனாவுக்கு கருப்பையில் கட்டிகள் இருந்ததால் தாய்மை அடைவது தடையாகிப்போனது. இதையடுத்து 1990-ம் ஆண்டு ஊனமுற்ற அனாதை சிறுவன் ஒருவனை தத்தெடுத்திருக்கிறார்கள். அந்த சிறுவனுக்கு மங்ஹேராம் என பெயரிட்டு வளர்த்திருக்கிறார்கள். 5 வயதானபோது அந்த சிறுவன் திடீரென்று உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இறந்து போனான்.

அன்பை பொழிந்து வளர்த்து வந்த அந்த சிறுவனின் எதிர்பாராத இழப்பு மீனாவை மீளா துயரத்தில் ஆழ்த்திவிட்டது. அதில் இருந்து மீள்வதற்காக மற்றொரு குழந்தையை தத்தெடுத்திருக்கிறார்கள். அந்த குழந்தை வளர வளர, தத்தெடுத்து குழந்தைகளை வளர்க்கும் ஆர்வமும் துளிர்விடத் தொடங்கி இருக்கிறது. இப்போது மீனாவின் பராமரிப்பில் 51 குழந்தைகள் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நன்கொடையாக பெறப்பட்ட இடத்தில் அனாதை இல்லத்தை அமைத்து குழந்தைகளை அரவணைத்து கொண்டிருக்கிறார்கள். அங்கு குழந்தைகளுக்கு கல்வி போதிப்பதற்காக சிறிய பள்ளியும் இயங்கிக்கொண்டிருக்கிறது. சிலர் அங்கு படித்து முடித்து வேலைக்கு சென்றுவிட்டார்கள். சிலருக்கு திருமணம் நடந்துவிட்டது.

‘‘நாங்கள் சாதி, மதம் எதுவும் பார்ப்பதில்லை. அனைவரும் என்னுடைய பிள்ளைகள்தான். அவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்க வேண்டும். அதற்கு முக்கிய கவனம் செலுத்துகிறோம்’’ என்கிறார், மீனா.

ஊனமுற்ற சிறுவர்கள் யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் நடமாடுவதற்கு ஏதுவாக அனாதை இல்லம் கட்டமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் விளையாடுவதற்கு வசதியாக பெரிய மைதானமும் அமைக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

‘‘எங்கள் மாநிலத்தில் உள்ள சுக்ரடால் கிராமப் பஞ்சாயத்து எங்களுக்கு பெரிய நிலப்பரப்பை நன்கொடையாக வழங்கி இருக்கிறது. அது இங்கு வசிக்கும் குழந்தைகளை பராமரிப்பதற்கு பயனுள்ளதாக அமைந்து விட்டது. நாங்கள் மக்களின் நன்கொடையை நம்பியுள்ளோம். ஏராளமானோர் கோதுமை மற்றும் பிற உணவு வகைகளை வழங்குகிறார்கள்’’ என்கிறார் வீரேந்தர்.

மேலும் செய்திகள்