‘ஒகி’ புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பயிர் கடனை ரத்து செய்ய வேண்டும் கல்லூரி மாணவர்கள் மனு

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பயிர் கடனை ரத்து செய்ய வேண்டும் என்று கலெக்டர் சஜ்ஜன்சிங் சவானிடம் கல்லூரி மாணவர்கள் மனு அளித்தனர்.

Update: 2017-12-16 23:00 GMT
நாகர்கோவில்,

திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளருமான செல்வக்குமார் தலைமையில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் மற்றும் நடிகர் விஜயின் மக்கள் இயக்க குமரி கிழக்கு மாவட்ட தலைவர் சகாயம், செய்தி தொடர்பாளர் நாராயணன் உள்பட பலர் நேற்று நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கலெக்டர் சஜ்ஜன்சிங் சவானிடம் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–

ஒகி புயலால் குமரி மாவட்டம் பேரழிவை சந்தித்து உள்ளது. சென்னை கனமழையின் போதும், வர்தா புயலின் போதும் துரித மீட்பு நடவடிக்கைகள் எடுத்த அரசு குமரி மாவட்ட மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த இழப்பினை கண்டு கொள்ளாமல் இருப்பது மனவேதனையை அளிக்கிறது.

எனவே புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் உடனே நிவாரணம் வழங்க வேண்டும். சேதம் அடைந்த படகுகளுக்கு பதில் புதிய படகுகளை வழங்க வேண்டும். இதே போல் விவசாயிகளுக்கு விவசாய கடனை ரத்து செய்வதோடு மீண்டும் பயிர் செய்ய மானியம் வழங்குதல் அவசியம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்