உயர் மின்னழுத்த பாதை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்

ஆரல்வாய்மொழி அருகே உயர் மின்னழுத்த பாதை அமைக்கும் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2017-12-16 23:00 GMT
ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி அருகே தேவசகாயம் மவுண்ட் பகுதியில் மின்பாதை சீரமைப்பு பணிகள் நடந்தன. இதற்காக நேற்று முன்தினம் பெரிய மின்கம்பங்கள் நடப்பட்டன. இதையடுத்து நேற்று காலையில் அந்த மின்கம்பங்களில் உயர் மின்னழுத்த கம்பிகள் கட்டப்பட்டன.

இதை பார்த்த பொதுமக்கள் தேவசகாயம் மவுண்டு பங்கு தந்தை ஸ்டீபன் தலைமையில் குவிந்தனர். அவர்கள் தங்கள் பகுதி வழியாக உயர் மின்னழுத்த பாதை அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பணியை தடுத்து நிறுத்தினர்.

இதுகுறித்து மின்வாரிய உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி போலீசாரும் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, பொதுமக்கள் தரப்பில் கூறும்போது, தங்கள் பகுதி வழியாக உயர் மின்னழுத்த மின்சாரம் கொண்டு செல்லும் பாதை அமைக்கும் பட்சத்தில் தங்களுக்கு பல விதத்தில் இடையூறு ஏற்படுவதாக கூறினர். இதையடுத்து மின்பாதை அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்