கோவில் உண்டியல் புதருக்குள் வீச்சு; பணத்தை கொள்ளையடித்த ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்

திருப்பூர் எம்.எஸ்.நகரில் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து விட்டு உண்டியலை புதருக்குள் வீசிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2017-12-16 21:30 GMT

திருப்பூர்,

திருப்பூருக்குட்பட்ட பகுதிகளில் திருட்டு சம்பவத்தை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூர் எம்.எஸ்.நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான காலி இடத்தில் புதர்மண்டி கிடந்த பகுதியில் கோவில் உண்டியல் ஒன்று கிடந்துள்ளது.

இந்த உண்டியலின் பூட்டு திறந்து இருந்தது. மேலும், அதில் குறைந்த அளவிலான சில்லறை காசுகள் மட்டுமே இருந்துள்ளன. நேற்று காலை இதை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் இதுகுறித்து உடனடியாக திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

அந்த தகவலின்படி போலீசார் அந்த பகுதிக்கு சென்று ஆய்வு செய்து கேட்பாரற்ற நிலையில் கிடந்த அந்த உண்டியலை மீட்டு விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அந்த உண்டியலை மர்ம நபர்கள் யாரோ ஏதோ கோவிலில் இருந்து திருடி கொண்டு வந்து ரூபாய் நோட்டுகளை எடுத்து விட்டு மீதம் உள்ள சில்லறை காசுகளை அப்படியே விட்டு சென்றதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அந்த உண்டியல் எந்த கோவிலுக்கு சொந்தமானது என்பது குறித்தும், அதில் எவ்வளவு பணம் இருந்தது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதை வீசிச்சென்றவர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்