ஆடுகளை வாங்கிவிட்டு கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுகளை கொடுத்த 2 வாலிபர்கள் கைது
பொங்கலூர் அருகே ஆடுகளை வாங்கிவிட்டு கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுகளை கொடுத்த 2 வாலிபர்களை போலீசார் கைதுசெய்தனர்.
பொங்கலூர்,
பொங்கலூர் அருகே உள்ள கோவில்பாளையத்தை சேர்ந்தவர் வேலுசாமி (வயது 60). விவசாயி. இவர் நேற்று முன்தினம் மதியம் செட்டிபாளையம் சாலையோரத்தில் தனது ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது, அந்தவழியாக காரில் வந்த 2 வாலிபர்கள் வேலுசாமியின் ஆடுகளை விலைக்கு கேட்டுள்ளனர். அதற்கு 6 வெள்ளாடுகள் ரூ.30 ஆயிரம் என்று வேலுசாமி கூறவே, அவர்கள் ரூ.28 ஆயிரத்துக்கு அவற்றை விலைபேசினர்.
பின்னர், 6 ஆடுகளையும் பிடித்து கால்களை கட்டி, காரில் ஏற்றிவிட்டு, வேலுசாமியிடம் ரூ.28 ஆயிரத்துக்கு 2000 ரூபாய் நோட்டுகளைகொடுத்தனர். அவர் பணத்தை வாங்காமல், அங்குவந்த பக்கத்து தோட்டத்துகாரரிடம் கொடுக்கும்படி கூறியுள்ளார். ஆனால் அவர்கள், வேலுசாமியின் கைகளில் பணத்தை திணித்துவிட்டு, காரில் ஏற முயன்றுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த பக்கத்து தோட்டத்துக்காரர், காரின் சாவியை எடுத்துவைத்துக்கொண்டு, வேலுசாமியிடம் இருந்த பணத்தை வாங்கி பார்த்த போது அவை அனைத்தும் ஒரே 2000 ரூபாய் நோட்டின் கலர் ஜெராக்ஸ் என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர் சத்தம்போடவே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து 2 வாலிபர்களையும் பிடித்து அவினாசிபாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் கோவை சரவணம்பட்டியை சேர்ந்த கார்த்திக்(32), சங்கரன்(31) என்பதும், இவர்கள் இருவரும் இதுபோல், கடந்த 3 வாரங்களுக்கு முன் குண்டடம் பகுதியில் லட்சுமி என்ற பெண்ணிடம் ஆடுகளை வாங்கிவிட்டு கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுகளை கொடுத்து ஏமாற்றியதும் தெரியவந்தது.
இது தொடர்பாக அவினாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைதுசெய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 34 கலர் ஜெராக்ஸ் நோட்டுகளை போலீசார் பறிமுதல்செய்தனர். பின்னர் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.