டாஸ்மாக் பார் ஊழியர் கொலை வழக்கு: குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் சென்னை விரைந்தனர்

திருப்பூர் அணைபுதூர் பகுதியில் டாஸ்மாக் பார் ஊழியர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் சென்னை விரைந்துள்ளனர்.

Update: 2017-12-16 22:45 GMT

அனுப்பர்பாளையம்,

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை அடுத்த கண்டியன்வயல் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 28). இவர் திருப்பூர்–அவினாசி ரோடு அணைபுதூர் அருகில் உள்ள டாஸ்மாக் கடை பாரில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அதே கடையில் சுந்தர் மற்றும் சுப்பிரமணி ஆகியோரும் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 14–ந்தேதி ராஜேஷ் வேலை பார்த்த பாருக்கு அணைபுதூர் பகுதியை சேர்ந்த 3 பேர் மது குடிக்க வந்தபோது அவர்களுக்கும் ராஜேஷ்க்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 3 பேரும் மது பாட்டிலை உடைத்து ராஜேசை பயங்கரமாக குத்தினார்கள். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த சக ஊழியர்களான சுந்தர் மற்றும் சுப்பிரமணி ஆகியோர் அவர்கள் 3 பேரையும் தட்டிக்கேட்டனர். அப்போது அவர்களையும் அந்த 3 பேர் சேர்ந்து பாட்டிலால் குத்திவிட்டு காரில் தப்பிச்சென்று விட்டனர். இதையடுத்து படுகாயம் அடைந்த 3 பேரும் திருமுருகன்பூண்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் ராஜேஷ் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார், சம்பந்தப்பட்ட 3 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 3 பேரும் சென்னையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அனுப்பர்பாளையம் இன்ஸ்பெக்டர் ராஜன்பாபு தலைமையில் போலீசார் சென்னை விரைந்துள்ளனர். படுகாயமடைந்த சுந்தர் மற்றும் சுப்பிரமணி ஆகியோர் திருமுருகன்பூண்டி தனியார் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்