கோவையில் கைதான ஏ.டி.எம். கொள்ளையர்களுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பா? போலீஸ் விசாரணை
கோவையில் கைதான ஏ.டி.எம். கொள்ளையர்களுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா? என்று போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;
கோவை,
கோவை பீளமேட்டில் 2 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து ரூ.30 லட்சம் கொள்ளையடித்த 8 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த முபாரக்(வயது30), சுபேர்(19), மோஷம்கான்(34) அரியானா மாநிலத்தை சேர்ந்த அமித்குமார்(35), மற்றொரு சுபேர்(33), அமீன்(34), உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த முஸ்தாக் (32), பீகார் மாநிலத்தை சேர்ந்த சுல்பிஹீர் (25) ஆகிய 8 பேரையும், கோர்ட்டு உத்தரவின்பேரில், போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த கும்பலுக்கு டெல்லியை சேர்ந்த அஸ்லாம் (32) என்பவர் தலைவனாக செயல்பட்டுள்ளார். அவர் தனது காதலி கிரணுடன் கோவைக்கு வந்துள்ளார். கோவையில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்ததும், ரூ.3 லட்சத்தை மட்டும் கூலிப்படையினருக்கு செலவுக்கு கொடுத்து விட்டு மீதி ரூ.27 லட்சத்தை அஸ்லாம் எடுத்துச்சென்றுவிட்டார்.
எனவே அஸ்லாம் மற்றும் அவருடைய காதலி கிரணை பிடிக்க கோவை தனிப்படை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். கொள்ளை கும்பலிடம் இருந்து கைத்துப்பாக்கி உள்பட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைதான கும்பல் மராட்டிய மாநிலத்தில் 11 இடங்களிலும், ஆந்திரா, கர்நாடகம், உத்தரபிரதேசம், கேரளா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும், தமிழ்நாட்டில் கோவை, வேலூர், மதுரை, தேனி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் கைவரிசை காட்டியுள்ளது. கொள்ளையடித்த பணத்தை அஸ்லாம், காஷ்மீர் மாநிலத்துக்கு கொண்டு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த பயங்கரவாத கும்பலுக்கு இந்த பணம் சென்று உள்ளதா? என்று விசாரணை நடைபெற்று வருகிறது.
கோவையில் நடைபெற்ற ஏ.டி.எம். கொள்ளைக்கு முஸ்தாக் தலைவனாக செயல்பட்டுள்ளார். கைதானவர்களில் ஒருவரான சுல்பிஹீர். பழ வியாபாரி. இவர் ஏ.டி.எம். எந்திரம் தொடர்பான தொழில்நுட்பங்களை தெரிந்து வைத்துள்ளார். இவரின் திட்டப்படி மோஷம்கான் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் இருக்கும் இடத்தை வெல்டிங் செய்து பணத்தை எடுத்துள்ளார். கைதான அமீத்குமார் ஏ.டி.எம். மையத்துக்கு வெளியே நின்று ஆட்கள் யாரேனும் வருகிறார்களா? என்று கண்காணிப்பார்.
கொள்ளைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை லாரிக்கு எடுத்து செல்வது சுபேரின் வேலை. கடைசியாக பணத்தை சொந்த ஊருக்கு கொண்டு செல்வது கும்பல் தலைவன் அஸ்லாமின் பணி என்று கொள்ளை வேலைகளை தனித்தனியாக பிரித்து கைவரிசை காட்டியுள்ளனர். வடமாநில கொள்ளை கும்பல் தலைவன் அஸ்லாமை பிடிக்க தனிப்படை விரைவில் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.