செங்குன்றம் அருகே கலப்பட டீசல் தயாரித்த தொழிற்சாலைக்கு ‘சீல்’

டீசல் தயாரித்த தொழிற்சாலைக்கு அதிகாரிகள் ‘சீல்’ தலைமறைவாக உள்ள உரிமையாளர் உள்பட 11 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2017-12-16 22:45 GMT
செங்குன்றம்,

செங்குன்றத்தை அடுத்த நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட விஜயநல்லூர் கிராமம் சுங்கச்சாவடி அருகே கலப்பட எண்ணெய், கலப்பட டீசல் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருவதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின்பேரில் நேற்று மாலை பொன்னேரி உதவி கலெக்டர் முத்துசாமி, தாசில்தார் சுமதி, மாவட்ட வழங்கல் அதிகாரி நாராயணன், சோழவரம் வருவாய் ஆய்வாளர் வாசுதேவன், கிராம நிர்வாக அதிகாரிகள் சீனிவாசன், ஸ்ரீபதி ஆகியோர் அந்த தொழிற்சாலைக்கு வந்தனர்.

அதிகாரிகள் வருவதை பார்த்ததும் ஊழியர்கள் 10 பேர் அங்கு இருந்து தப்பி ஓடினார்கள். பின்பு அதிகாரிகள் சோதனை செய்தபோது தொழிற்சாலையில் கலப்பட எண்ணெயும், கலப்பட டீசலும் தயாரித்து வருவது தெரியவந்தது.

மேலும், 3 டேங்கர் லாரிகளில் கலப்பட டீசல் ஏற்றிக் கொண்டிருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. அந்த லாரிகளுக்கு ‘சீல்’ வைத்த அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர். மேலும், அந்த தொழிற்சாலைக்கும் ‘சீல்’ வைத்தனர்.

இது குறித்து சோழவரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினார்கள். மேலும், இதுபற்றி வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள தொழிற்சாலையின் உரிமையாளர் உள்பட 11 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்