ஓடும் பஸ்சில் வாலிபர் கொலை: கொலையாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம்

மதுரை கரிமேட்டை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் மகன் அமரேஷ் என்ற அமர் (வயது 22).;

Update: 2017-12-16 22:30 GMT

வாடிப்பட்டி,

மதுரை கரிமேட்டை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் மகன் அமரேஷ் என்ற அமர் (வயது 22). இவர் நேற்றுமுன்தினம் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவிலிருந்து மதுரைக்கு அரசு பஸ்சில் வந்தார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை அடுத்த தனிச்சியம் பிரிவு அருகே பஸ் வந்த போது, அதை வழிமறித்த காரில் வந்த மர்ம கும்பல், பஸ்சில் ஏறி அமரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டது. அதில் பலத்தகாயமடைந்த அவர் பஸ்சிற்குள்ளேயே பலியனார். தகவலறிந்து வந்த வாடிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் 2011–ம் ஆண்டு மதுரையில் ராம்பிரசாத் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அமர் சம்மந்தப்பட்டவர் என்றும், அந்த கொலைக்கு பழிக்கு பழியாக, தற்போது அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் கருதினர். மேலும் அச்சம்பத்து என்ற ஊரின் சுடுகாடு அருகே கொலையாளிகள் பயன்படுத்திய கார், கத்தி, அரிவாள்களை போலீசார் கைப்பற்றினர்.

கொலையாளிகளை பிடிக்க சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், சமயநல்லூர் முத்துப்பாண்டி, அலங்காநல்லூர் அன்னராஜ், என்.பி.கோட்டை முத்து ஆகியோர் கொண்ட 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு சென்று கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் விசாரணையில் ராம்பிரசாத்தின் நண்பர்களில் 10 பேர் கொண்ட கும்பல் திட்டமிட்டு அமரை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்