காருகுடி தலைமதகு வழியாக ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு வைகை தண்ணீர் கொண்டு செல்லும் பணி

ராமநாதபுரம் வந்துள்ள வைகை தண்ணீரை காருகுடி தலைமதகு வழியாக பெரிய கண்மாய்க்கு கொண்டு செல்லும் பணியை மாவட்ட கலெக்டர் நடராஜன் பார்வையிட்டார்.

Update: 2017-12-16 21:45 GMT

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வைகை அணையில் இருந்து போதிய அளவு தண்ணீர் திறந்து விட முதல்–அமைச்சர் உத்தரவிட்டதை தொடர்ந்து கடந்த 5–ந்தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. வைகை அணையில் திறந்துவிடப்பட்ட தண்ணீரை காருகுடி தலை மதகு வழியாக ராமநாதபுரம் பெரிய கண்மாயில் சேமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது. இதனை மாவட்ட கலெக்டர் நடராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:– முதல்–அமைச்சர் உத்தரவுப்படி ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது ராமநாதபுரம் பெரிய கண்மாய் நீர்பிடி பகுதியில் தண்ணீர் சேமிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நீர்சேமிப்பு பணிகளின் மூலம், கண்மாயில் போதிய கொள்ளளவு எட்டியவுடன் 5–வது மடையில் இருந்து ராமநாதபுரத்தில் உள்ள பிரதான ஊருணிகளான முகவை, நீலகண்டி, லட்சுமிபுரம் ஆகிய ஊருணிகளுக்கும், அதனைத்தொடர்ந்து 6–வது மடை வழியாக நொச்சிவயல், சிதம்பரம் பிள்ளை, புறமடை ஊருணி ஆகியவற்றுக்கும் வரத்துக்கால்வாய்கள் வழியாக தண்ணீர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுஉள்ளது. இதையடுத்து அந்தந்த ஊருணிகளுக்கான வரத்துக்கால்வாய்களின் நிலையை கள ஆய்வு செய்ய நகராட்சி மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுஉள்ளது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் தொடர் வறட்சியின் காரணமாக வறண்ட நிலையில் உள்ளன. தற்போது வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீரை மாவட்டத்தில் உள்ள பிரதான நீர்நிலைகளில் வீணாகாமல் சேமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுஉள்ளது. இதன் மூலம் பொதுமக்களின் குடிநீர் தேவை பூர்த்தியாவதோடு, நிலத்தடி நீர்மட்டம் அதிகரிப்பதற்கு வாய்ப்பாக அமையும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வெங்கடகிருஷ்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜா, உதவி செயற்பொறியாளர்கள் செய்யது ஹபீப், ராமகிருஷ்ணன் உள்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்