நெல்லையில் வங்கி மோசடி குறித்து விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வினியோகம் துணை போலீஸ் கமி‌ஷனர் தொடங்கி வைத்தார்

வங்கி மோசடி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுர வினியோகத்தை, நெல்லை மாநகர துணை போலீஸ் கமி‌ஷனர் பெரோஸ்கான் அப்துல்லா தொடங்கி வைத்தார்.

Update: 2017-12-16 21:00 GMT

நெல்லை,

வங்கி மோசடி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுர வினியோகத்தை, நெல்லை மாநகர துணை போலீஸ் கமி‌ஷனர் பெரோஸ்கான் அப்துல்லா தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு துண்டுபிரசுரம்

வங்கி அதிகாரி பேசுவது போல் செல்போனில் பேசி பொதுமக்களின் வங்கி ஏ.டி.எம்.கார்டு ரகசிய எண், ஓ.டி.பி. எண், ஆதார் எண் ஆகியவற்றை வாங்கி கொண்டு அவர்களுடைய வங்கி கணக்கில் உள்ள பணத்தை ஆன்–லைன் மூலம் எடுத்து மோசடியில் ஈடுபடுகின்ற சம்பவம் தொடர்கதையாக நடந்து வருகிறது.

இந்த நூதன மோசடி குறித்து பொதுமக்களிடைய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நெல்லை மாநகர போலீசார் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் நெல்லை மாநகர சைபர் கிரைம் போலீசாரும், ஸ்டேட் வங்கியும் இணைந்து நெல்லை மாநகர பகுதியில் விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கும் பணியில் ஈடுபட்டது.

இதனை நெல்லை மாநகர துணை போலீஸ் கமி‌ஷனர் பெரோஸ்கான் அப்துல்லா தொடங்கி வைத்தார். இதில் இன்ஸ்பெக்டர் பத்மாவதி, சப்–இன்ஸ்பெக்டர் அன்னபூரணி, ஸ்டேட் வங்கி மண்டல மேலாளர் சுரேஷ், முதன்மை மேலாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து நெல்லை மாநகர துணை போலீஸ் கமி‌ஷனர் பெரோஸ்கான் அப்துல்லா கூறியதாவது:–

கண்காணிப்பு கேமரா மூலம்

வங்கி அதிகாரி பேசுவது போல் பேசி பொதுமக்களிடம் ஏ.டி.எம். ரகசிய நம்பரை யார் கேட்டாலும் கொடுக்கக்கூடாது. வங்கி அதிகாரிகள் இந்த நம்பரை கேட்கமாட்டார்கள். ரகசிய நம்பர், ஓ.டி.பி. எண்ணை வாங்கி உங்கள் பணத்தை ஆன்–லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு பணத்தை எடுத்து விடுகிறார்கள். இதில் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். நெல்லை மாநகர பகுதியில் நடைபெற்ற கொள்ளை, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று கொள்ளையர்களை பிடித்து வருகிறார்கள்.

நெல்லை சந்திப்பில் பழக்கடை உரிமையாளர் வீட்டில் கொள்ளையடித்த கொள்ளையர்கள், கண்காணிப்பு கேமிரா மூலம் அடையாளம் தெரிந்து உள்ளனர். குற்றவாளிகளை தனிப்படை போலீசார் நெருங்கி விட்டார்கள். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள். இதேபோல் பாளையங்கோட்டையில் வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டு நகை கொள்ளையடித்த சம்பவத்தில் கைதானவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்