2019–ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் ராஜ்தாக்கரே மாநிலம் முழுவதும் சூறாவளி பயணம்

2019–ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு ராஜ்தாக்கரே மாநிலம் முழுவதும் சூறாவளி பயணம் மேற்கொள்ள உள்ளார்.

Update: 2017-12-16 00:12 GMT

மும்பை,

ராஜ்தாக்கரே தலைமையிலான மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி சமீபகாலமாக பல்வேறு பின்னடைவுகளை சந்தித்து வருகிறது. 2009–ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அக்கட்சி 13 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தது. ஆனால் 2014–ம் ஆண்டு தேர்தலில் அக்கட்சியால் ஒரு இடத்தை மட்டுமே பெற முடிந்தது. இதேபோல 2012–ம் ஆண்டு மும்பை மாநகராட்சி தேர்தலில் 28 வார்டுகளில் வெற்று பெற்ற அக்கட்சி கடந்த தேர்தலில் 7 இடங்களில் மட்டுமே வென்றது.

இதிலும், 6 கவுன்சிலர்கள் சிவசேனாவிற்கு தாவிவிட்டனர்.

இந்தநிலையில் கட்சியை பலப்படுத்த ராஜ்தாக்கரே கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

இதில், முதல் கட்டமாக நவநிர்மாண் சேனா கட்சியின் மூத்த நிர்வாகிகள் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். அவர்கள் நவநிர்மாண் சேனாவிற்கு வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகள் மற்றும் கடந்த தேர்தல்களில் அக்கட்சி அதிக வாக்குகள் பெற்ற பகுதிகளுக்கு செல்ல உள்ளனர். மேலும் அங்கு செய்யவேண்டிய நலத்திட்டங்கள் குறித்து அறிந்து அந்த விவரங்களை ராஜ்தாக்கரேயிடம் அளிக்க உள்ளனர். அதன்பிறகு ராஜ் தாக்கரே மாநிலம் முழுவதும் சூறாவளி பயணம் மேற்கொள்ள உள்ளார். அவர் 2019–ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இந்த பயணத்தை மேற்கொள்கிறார். அவர் ஜனவரி மாத கடைசியில் தனது பயணத்தை தொடங்கலாம் என கட்சி வட்டாரத்தகவல்கள் கூறுகின்றன.

ராஜ்தாக்கரே மாநிலம் முழுவதும் நவநிர்மாண் சேனாவிற்கு வெற்றி வாய்ப்பு உள்ள 50 சட்டமன்ற தொகுதிகளுக்காவது சென்று கட்சியை பலப்படுத்துவார் என தெரிகிறது. எனினும் இது குறித்த இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை.

மேலும் செய்திகள்