காரில் ரகசிய அறை அமைத்து கடத்தப்பட்ட 45 துப்பாக்கிகள், 4 ஆயிரம் தோட்டாக்கள் பறிமுதல்

காரில் ரகசிய அறை அமைத்து கடத்தப்பட்ட 45 துப்பாக்கிகள், 4 ஆயிரத்து 166 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 3 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2017-12-16 00:09 GMT
நாசிக்,

நாசிக் மாவட்டம், மாலேகாவ் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒரு கும்பல் காரில் வந்தது.

அந்த கும்பலினர் ரூ.2 ஆயிரத்து 700-க்கு டீசல் போட்டு, டேங்கை நிரப்பினர். பின்னர், பெட்ரோல் ‘பங்க்’ ஊழியர்கள் பணம் கேட்டபோது, அவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி விட்டு, பணம் கொடுக்காமல் அந்த கும்பல் காரில் தப்பிச்சென்றது.

இதனால், அதிர்ச்சிக்குள்ளான பெட்ரோல் ‘பங்க்’ உரிமையாளர், உடனடியாக அப்பகுதி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து நாசிக் எல்லைப்பகுதியில் உள்ள சோதனைச்சாவடிகளில் போலீஸ் கண்காணிப்பு உஷார்படுத்தப்பட்டது. இந்த நிலையில் நாசிக் ஊரக போலீசார் நேற்று அதிகாலை ஆக்ரா- மும்பை நெடுஞ்சாலையில், மாலேகாவை அடுத்த சந்த்வாட் சுங்கச்சாவடி அருகே வைத்து அந்த காரை வழிமறித்தனர்.

பின்னர், காரில் சோதனை போட்டனர். அப்போது காரின் மேற்கூரை பகுதியில் ரகசிய அறை அமைக்கப்பட்டு இருந்தது. அதனை திறந்து பார்த்தபோது துப்பாக்கி, தோட்டாக்கள் குவியல், குவியலாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், அதிர்ச்சி அடைந்த போலீசார், அதில் இருந்த 25 துப்பாக்கிகள், ஒரு எந்திர துப்பாக்கி, 19 கைத்துப்பாக்கி என மொத்தம் 45 துப்பாக்கிகள் மற்றும் 4 ஆயிரத்து 166 தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து காரில் இருந்த 3 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் நாசிக் வடலா பகுதியை சேர்ந்த நாகேஷ் (வயது 23), மும்பை சிவ்ரி பகுதியை சேர்ந்த சல்மான் அமனுல்லாகான் (19), பத்ரினுஜாம் பாட்ஷா என்ற சுமித் (27) என்பது தெரியவந்தது.

இதனிடையே, தகவல் அறிந்த உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களுக்கு ஆயுதங்கள் எப்படி கிடைத்தது? அவற்றை எங்கிருந்து கடத்தி வந்தனர்? என்பது குறித்து அவர்களிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர்.

அப்போது, உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் குடோன் ஒன்றில் இருந்து அந்த ஆயுதங்களை திருடி கடத்தி வந்ததாக 3 பேரும் வாக்குமூலம் அளித்தனர். இந்த ஆயுதங்களை வைத்து மராட்டியத்தில் நாசகார செயலுக்கு அவர்கள் பயன்படுத்த கொண்டு வந்து இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த கோணத்தில் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஏற்கனவே, கடந்த 2006-ம் ஆண்டு அவுரங்காபாத்தில் 43 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்து, 50 கையெறி குண்டுகள், ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் மற்றும் 3 ஆயிரத்து 200 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம் குறித்து கடுமையான மோக்கா பிரிவின்கீழ், போலீசார் வழக்குப்பதிவு செய்து பயங்கரவாதி அபு ஜிண்டால் உள்ளிட்ட 21 பேரை கைது செய்திருந்தனர்.

இந்த சம்பவத்திற்கு பிறகு மராட்டியத்தில் மீண்டும் ஆயுதங்கள் குவியலாக பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் செய்திகள்