தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளது

14 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி இருக்கிறோம் என்றும், முதலீடுகளை ஈர்ப்பதில் கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளது என்றும் ராய்ச்சூரில் நடந்த காங்கிரஸ் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் சித்தராமையா கூறினார்.;

Update: 2017-12-15 23:45 GMT

ராய்ச்சூர்,

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி முதல்–மந்திரி சித்தராமையா ஒரு மாத சுற்றுப்பயணத்தை கடந்த 13–ந் தேதி பீதரில் தொடங்கினார். அவர் நேற்று 3–வது நாள் பயணத்தை ராய்ச்சூர் மாவட்டத்தில் மேற்கொண்டார். அங்கு நடைபெற்ற காங்கிரஸ் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் சித்தராமையா கலந்து கொண்டு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து பேசியதாவது:–

வட கர்நாடகத்தின் வளர்ச்சிக்காக எங்கள் அரசு தீவிரமாக பாடுபட்டு வருகிறது. மண்டல ஏற்றத்தாழ்வுகளை போக்க நாங்கள் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை இங்கு அமல்படுத்தி வருகிறோம். இதை பொய் என்று பா.ஜனதாவினர் சொல்லட்டும் பார்க்கலாம். ஐதராபாத்–கர்நாடக பகுதிக்கு நாங்கள் அரசியல் சாசனத்தில் சிறப்பு அந்தஸ்து பெற்று கொடுத்தோம்.

நாட்டிலேயே தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு 14 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி இருக்கிறோம். நாங்கள் எங்களின் தொழில் கொள்கையில் 15 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக கூறினோம். ‘மன் கி பாத்’தில் பேசுபவர்களுக்கு ஓட்டுப்போட வேண்டுமா? அல்லது எங்களுக்கு வாக்களிக்க வேண்டுமா? என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும்.மோடி வெறும் பேச்சை மட்டுமே பேசுகிறார். செயல்பாட்டில் ஒன்றும் அவர் சாதிக்கவில்லை. எங்கள் அரசு ஊழல்களை செய்ததாக எடியூரப்பா சொல்கிறார். அதற்கு ஆதாரங்களை வெளியிடுவதாக சொல்லிக்கொண்டு சுற்றுகிறார். ஆனால் இதுவரை அவர் எந்த ஆதாரங்களையும் வெளியிடவில்லை. பா.ஜனதாவினர் விவசாயிகளின் விரோதிகள்.

அதனால் இப்பகுதி மக்கள் சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஓட்டுப்போட வேண்டாம். இதை காங்கிரசார் வீடு, வீடாக சென்று மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். விவசாயிகளின் விரோதியான எடியூரப்பாவுக்கு பச்சை துண்டை தோளில் போட தகுதி இருக்கிறதா?. பள்ளிகளில் நாங்கள் இலவச பால் வழங்குகிறோம். இதனால் ஊட்டச்சத்து குறைபாடு குறைந்துள்ளது. இந்த திட்டம் எடியூரப்பா, சதானந்தகவுடா, ஜெகதீஷ் ஷெட்டர் ஆட்சி காலங்களில் செயல்படுத்தப்பட்டதா?. எதற்காக பா.ஜனதாவுக்கு நீங்கள் ஓட்டுப்போட வேண்டும்?. சற்று யோசித்து பாருங்கள்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

மேலும் செய்திகள்