கும்மிடிப்பூண்டி அருகே நின்றுக்கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதல்; டிரைவர் பலி

கும்மிடிப்பூண்டி அருகே நின்றுக்கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் லாரி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2017-12-15 22:15 GMT

கும்மிடிப்பூண்டி,

நாகப்பட்டினம் மாவட்டம் வால்குடி கிராமத்தில் உள்ள ஆணைக்கோவில் குடியானவர் தெருவை சேர்ந்தவர் மோகன் (வயது 36). லாரி டிரைவர். இவருக்கு சங்கீதா (31) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு அனுப்பம்பட்டு கிராமத்தில் இருந்து இரும்பு பொருட்களை ஏற்றிக்கொண்டு ஆந்திர மாநிலம் நாயுடுபேட்டை நோக்கி லாரியை மோகன் ஓட்டிச்சென்றார். லாரியில் கிளீனர் யாரும் இல்லை.

கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர் பகுதியில் உள்ள சென்னை–கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் லாரி செல்லும்போது அதே திசையில் சாலைலில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு லாரியின் பின்னால் மோகன் ஓட்டிச்சென்ற லாரி எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில் மோகன் ஓட்டிச்சென்ற லாரியின் முன்புறம் அப்பளம் போல் நொறுங்கியது. சம்பவ இடத்திலேயே மோகன் துடிதுடித்து பரிதாபமாக உயரிழந்தார். இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய மோகனின் உடலை கும்மிடிப்பூண்டி தீயணைப்பு துறையினர் போராடி மீட்டனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து சப்–இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்