வேலூரில் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளர்கள் உண்ணாவிரத போராட்டம்
தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
வேலூர்,
தமிழ்நாடு வருவாய்த்துறை கிராமஉதவியாளர்கள் சங்கம் சார்பில் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. வேலூரில் கலெக்டர் அலுவலகம் எதிரில் உண்ணாவிரதம் இருந்தனர்.
போராட்டத்திற்கு தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க மாவட்ட தலைவர் பிரகாசம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரமேஷ், பொருளாளர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சரவணராஜ், அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநில பொதுசெயலாளர் கிருஷ்ணமூர்த்தி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராஜாமணி மற்றும் வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க மாநில பொதுசெயலாளர் தமிழ்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
கிராம உதவியாளர்களுக்கு, அலுவலக உதவியாளருக்கு இணையான அடிப்படை ஊதியம் வழங்கவேண்டும், அரசு ஊழியர்களுக்கு இணையாக கடைசிமாத ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கவேண்டும், அரசு ஊழியர்களுக்கு இணையான பொங்கல் போனஸ் வழங்கவேண்டும்.
கிராமநிர்வாக அலுவலர் பதவி உயர்வு 10 ஆண்டுகள் என்பதை 5 ஆண்டுகளாக குறைத்து அரசாணை வெளியிடவேண்டும், பதவி உயர்வு வழங்கப்படாமல் உள்ளவர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்கவேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். புதிதாக இணைந்துள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை வழங்கவேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. முடிவில் மாவட்ட இணைசெயலாளர் மணிவண்ணன் நன்றி கூறினார்.