பாலாற்றில் மணல் திருட்டை தடுக்கக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

ஆம்பூர் பாலாற்றில் காவிரி கூட்டுகுடிநீர் குழாய் அருகே மணல் திருட்டை தடுக்கக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2017-12-15 22:00 GMT

ஆம்பூர்,

பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது ஆம்பூர், பச்சகுப்பம் பகுதியில் காவிரி கூட்டுகுடிநீர் குழாய் சேமடைந்தது. இதனால் வேலூர் மாநகராட்சி மற்றும் பல்வேறு நகராட்சிகளுக்கு குடிநீர் வினியோகம் தடைபட்டது. அதைத்தொடர்ந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் மகேஸ்வரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது குழாய் செல்லும் பகுதியில் மணல் திருட்டு நடப்பதன் காரணமாக குடிநீர் குழாய்கள் சேதமடைவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து குழாய்கள் அமைந்துள்ள பகுதியில் மணல் அள்ளக்கூடாது எனவும் இதுகுறித்து அதிகாரிகள் கண்காணிப்பு செய்வார்கள் என்றும் அவர் கூறினார்.

ஆம்பூர் சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் குழாய் அமைந்துள்ள பகுதியில் இரவு, பகலாக மாட்டு வண்டிகள் மூலம் மணல் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இதனை தட்டிக்கேட்ட அப்பகுதி மக்களையும் மணல் எடுக்கும் கும்பல் மிரட்டி வருகிறது.

இந்தநிலையில் நேற்று காலை 10 மாட்டு வண்டிகள் அப்பகுதியில் மணல் எடுக்க வந்தது. பொதுமக்கள் மாட்டுவண்டிகளை சிறைபிடித்தனர். இதனையறிந்த ஆற்றில் மணல் எடுத்து கொண்டிருந்த 50–க்கும் மேற்பட்டோர் அங்கு சென்று பொதுமக்களை மிரட்டி மாட்டு வண்டிகளை மீட்டு சென்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் திருப்பத்தூர் சப்–கலெக்டருக்கு போனில் தகவல் தெரிவித்தனர்.

மேலும் பாலாற்றில் மணல் எடுப்பதை தடை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய்த் துறையினர் விரைந்து உரிய நடவடிக்ககை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:–

ஆம்பூர் பாலாற்று பகுதியில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் திருட்டு அதிகமாக நடைபெறுகிறது. இதற்கு ஆம்பூர் தாலுகா மற்றும் உமராபாத் போலீசார் ஒத்துழைப்பு வழங்குகின்றனர். குறிப்பாக மணல் எடுக்கும் ஒரு மாட்டு வண்டிக்கு மாதம் ஒரு தொகை நிர்ணயம் செய்து வசூலிக்கப்படுகிறது.

இதற்காக போலீஸ் நிலையத்தில் அதற்கென புரோக்கர்கள் உள்ளனர். அவர்கள் மாட்டு வண்டி உரிமையாளர்களை சந்தித்து வசூல் செய்து போலீசாரிடம் வழங்குகின்றனர்.

இதனிடையே பாலாற்றில் வெள்ளம் சென்றபோது மாட்டு வண்டியில் மணல் எடுக்கவில்லை. மணல் எடுக்காமல் இருந்ததற்கும் சேர்த்து மாமூல் தரவேண்டும் என புரோக்கர் மாட்டு வண்டி உரிமையாளர்களை மிரட்டி வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் புகார் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்