அனுமதியின்றி கட்டப்பட்ட தனியார் பள்ளி உள்பட 7 கட்டிடங்கள் பூட்டி ‘சீல்’ வைப்பு

கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டப்பட்ட தனியார் பள்ளி உள்பட 7 கட்டிடங்கள் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன.

Update: 2017-12-15 22:45 GMT

கொடைக்கானல்,

கொடைக்கானல் நகர் பகுதியில் நாளுக்கு நாள் குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சீட்டுக்கட்டை அடுக்கி வைத்தாற்போல் கட்டிடங்களின் எண்ணிக்கை உயர்ந்து நிற்கிறது. இதில் முறையாக அனுமதி பெற்று வீடுகள், வணிக வளாகங்கள், தங்கும் விடுதிகளை கட்டியுள்ளனர்.

இருப்பினும் பலர் உரிய அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டியிருப்பதாக புகார் எழுந்தன. இதையடுத்து நகராட்சி நிர்வாகத்தின் சார்பாக நகரமைப்பு அலுவலர்கள், ஆய்வாளர்கள் நகரில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்கள் குறித்து அளவீடு செய்தனர். அப்போது பல கட்டிடங்கள் கட்டப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டன. இதனை எதிர்த்து பலர் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தனர். இதில் பல வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டு உரிய முறையில் அரசினை அணுகி நிவாரணம் தேடிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பலர் நகராட்சி நிர்வாக ஆணையரிடம் மனு அளித்தனர்.

இந்தநிலையில் அனுமதியின்றி கட்டப்பட்ட 47 கட்டிட உரிமையாளர்களுக்கு கடந்த மாதம் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று அந்த கட்டிடங்களுக்கு ‘சீல்’ வைக்கும் பணி தொடங்கியது. நகராட்சி ஆணையாளர் சரவணன் தலைமையில் நகரமைப்பு அலுவலர் முருகானந்தம், இளநிலை பொறியாளர் சேகர் ஆகியோர் நகராட்சி ஊழியர்களுடன் ஏரிச்சாலையில் அனுமதியின்றி கட்டப்பட்ட தனியார் பள்ளி மற்றும் வத்தலக்குண்டு மெயின் ரோட்டில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் உள்பட 7 வணிக வளாகங்களை பூட்டி ‘சீல்’ வைத்தனர்.

இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் சரவணன் கூறுகையில், கொடைக்கானல் நகரில் அனுமதியின்றி கட்டப்பட்ட 47 கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதில் முதற்கட்டமாக 7 கட்டிடங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடரும் என்று கூறினார். இதற்கிடையே அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்ட சம்பவத்தால் கொடைக்கானல் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்