திருச்செந்தூர் கோவில் மண்டப மேற்கூரை இடிந்து விழுந்து பலியான பேச்சியம்மாளின் குழந்தைகளுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்

திருச்செந்தூர் கோவில் மண்டப மேற்கூரை இடிந்து விழுந்து பலியான பேச்சியம்மாளின் குழந்தைகளுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும்

Update: 2017-12-15 21:30 GMT
திருச்செந்தூர்,

திருச்செந்தூர் கோவில் மண்டப மேற்கூரை இடிந்து விழுந்து பலியான பேச்சியம்மாளின் குழந்தைகளுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்து உள்ளார்.

அனிதா ராதாகிருஷ்ணன் ஆறுதல்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கிரிப்பிரகார மண்டப மேற்கூரை நேற்று முன்தினம் காலையில் இடிந்து விழுந்தது. இதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய திருச்செந்தூர் முத்தாரம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஆதிநாராயணன் மனைவி பேச்சியம்மாள் (வயது 43) உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த நிலையில் தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. திருச்செந்தூர் கோவிலில் இடிந்த மண்டபத்தை நேற்று காலையில் பார்வையிட்டார். பின்னர் அவர் இறந்த பேச்சியம்மாளின் மகள் சுமதி (14), மகன் சுரேஷ் (12) மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர்களிடம் தி.மு.க. சார்பில் குடும்பநல நிதியாக ரூ.1 லட்சத்தையும் வழங்கினார்.

ரூ.20 லட்சம் நிவாரணம்

முன்னதாக அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், திருச்செந்தூர் கோவில் வளாகம், விடுதிகள் பழுதடைந்த நிலையில் உள்ளன. அவற்றை உடனே ஆய்வு செய்து பராமரிக்க வேண்டும். மண்டப மேற்கூரை இடிந்து விழுந்து பலியான பேச்சியம்மாளின் மகன், மகளுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் மொத்தம் ரூ.20 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று கூறினார்.

அவருடன் தி.மு.க. ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், நகர செயலாளர்கள் மந்திரமூர்த்தி (திருச்செந்தூர்), ராஜசேகர் (ஆறுமுகநேரி), ராமஜெயம் (தென்திருப்பேரை), முன்னாள் கவுன்சிலர் சுதாகர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்