போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஷேர் ஆட்டோ டிரைவர்கள் முற்றுகை போராட்டம்

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு ஷேர் ஆட்டோக்களை வரிசையாக நிறுத்தி வைத்து, டிரைவர்கள் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-12-15 00:11 GMT

வேலூர்,

வேலூர் பழைய பஸ்நிலையத்தில் இருந்து அடுக்கம்பாறை மற்றும் ஸ்ரீபுரத்துக்கு ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆட்டோக்களில் ஸ்ரீபுரம் மற்றும் அடுக்கம்பாறைக்கு ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பழைய பஸ் நிலையத்தில் இருந்து மேற்கண்ட பகுதிகளுக்கு 25 ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.

பழைய பஸ் நிலையத்தில் ஷேர் ஆட்டோக்களை நிறுத்தும் இடத்தில் கடந்த ஒரு மாதமாக 20–க்கும் மேற்பட்ட ஆட்டோக்களை சிலர் நிறுத்தி இயக்கி வருவதாக கூறப்படுகிறது. இதனால், ஷேர் ஆட்டோ டிரைவர்களுக்கும், மற்ற ஆட்டோ டிரைவர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. மேலும் ஷேர் ஆட்டோ டிரைவர் நவீன்குமார் என்பவர் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுபற்றி ஷேர் ஆட்டோ டிரைவர்கள் கடந்தசில நாட்களுக்கு முன்பு வட்டார போக்குவரத்து அலுவலரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர். ஆனால், அவர் இதுபற்றி நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று காலை ஷேர் ஆட்டோ டிரைவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்றனர். போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு ஷேர் ஆட்டோக்களை வரிசையாக நிறுத்தி வைத்து டிரைவர்கள் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும், சத்துவாச்சாரி போக்குவரத்துப் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன், தனிப்பிரிவு சப்–இன்ஸ்பெக்டர் நாகேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஷேர் ஆட்டோ டிரைவர்களுடன் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர்.

இன்னும் 2 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து ஷேர் ஆட்டோ டிரைவர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் கோரிக்கை மனுவை போலீஸ் அதிகாரிகளிடம் கொடுத்து விட்டு, அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.


மேலும் செய்திகள்