நெசவாளர்களுக்கு புதிய தொழில்நுட்ப பயிற்சி
மத்திய அரசின் நிறுவனம் மூலம் நெசவாளர்களுக்கு புதிய தொழில்நுட்ப பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. நெசவாளர்கள் புதுவையில் 11 நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இதில் 1,200 குடும்பத்தினர் பதிவு செய்து நெசவு தொழில் செய்து வருகின்றனர். கைத்தறி மூலம் நெ
புதுச்சேரி,
மத்திய அரசின் நிறுவனம் மூலம் நெசவாளர்களுக்கு புதிய தொழில்நுட்ப பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது
புதுவையில் 11 நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இதில் 1,200 குடும்பத்தினர் பதிவு செய்து நெசவு தொழில் செய்து வருகின்றனர். கைத்தறி மூலம் நெசவு செய்யும் நெசவாளர்களிடம் இருந்து கடந்த காலங்களில் பாண்டெக்ஸ், பாண்பேப் போன்றவை துணிகளை கொள்முதல் செய்து விற்பனை செய்து வந்தன.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பாவுநூல் வழங்காததாலும், அரசு நிறுவனங்களுக்கு வழங்கிய துணிகளுக்கு உரிய தொகை வழங்காததாலும் நெசவுத்தொழில் நலிவடைந்துள்ளது. இதனால் இந்த தொழிலையே நம்பி வாழ்பவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி அமைச்சர் கந்தசாமி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது நெசவுத்தொழிலில் புதிய நுட்பங்களை புகுத்தினால்தான் நெசவாளர்களின் வாழ்க்கைத்தரம் உயரும் என கருத்து தெரிவிக்கப்பட்டது. இதற்காக மத்திய ஜவுளித்துறை இயக்குனரகத்தின் கீழ் சென்னையில் இயங்கும் தென்மண்டல நெசவாளர் சேவை மையத்தின் இயக்குனரை சந்திக்க முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி அமைச்சர் கந்தசாமி தலைமையில் துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ., பாண்பேப் இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, மேலாண் இயக்குனர் செல்வராஜ், தொழில்நுட்ப மேலாளர் சதாசிவம், தயாரிப்பு மேற்பார்வையாளர் சுப்ரமணியன் ஆகியோர் சென்னை தென்மண்டல நெசவாளர் சேவை மையத்துக்கு சென்றனர். அங்கு நெசவாளர் சேவை மைய இயக்குனர் விஜேஷ் நட்டியால், இணை இயக்குனர் ஹரிபிரசாத் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்கள்.
அப்போது கிளஸ்டர் திட்டத்தின்கீழ் நெசவாளர்களின் அபிவிருத்திக்காக 3 திட்டங்கள் இருப்பதாகவும், இத்திட்டத்தின்கீழ் மத்திய அரசு 90 சதவீத நிதி அளிப்பதாகவும், கைத்தறியில் வழக்கமாக தயாரிக்கும் சேலை, துண்டு, வேட்டி ஆகியவற்றுக்கு மாற்றாக உயர்ந்த லினன் துணிகளையும், விலை உயர்ந்த காட்டன் சேலைகளையும் தயாரிக்கலாம் என்று தெரிவித்தனர்.
இதற்காக மத்திய அரசு பயிற்சி தருவதாகவும், இதுபோன்ற உயர்ரக துணிகளை தயாரித்தால் அவற்றை வியாபாரிகள் நேரடியாகவே கொள்முதல் செய்கின்றனர் என்று தென்மண்டல நெசவாளர் சேவை மைய இயக்குனர் விஜேஷ் நட்டியால் தெரிவித்தார்.
அவரிடம் அமைச்சர் கந்தசாமி, வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. ஆகியோர் புதுவை நெசவாளர்களுக்கு பயிற்சி அளிக்கவும், மத்திய அரசின் திட்டத்தின் கீழ் நிதியை பெற்றுத்தரவும் உதவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும் புதுவைக்கு நேரில் வந்து நெசவாளர்களை சந்தித்து ஆய்வுக்கூட்டம் நடத்தி அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர். இதை ஏற்று நெசவாளர் சேவை மைய இயக்குனர் வருகிற 21–ந்தேதி புதுச்சேரிக்கு வர ஒப்புக்கொண்டார்.
நெசவாளர்களுக்கு பயிற்சி வழங்குவது தொடர்பாக அமைச்சர் கந்தசாமி தென்மண்டல நெசவாளர் சேவை மைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியபோது எடுத்தபடம். அருகில் துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. ஆகியோர் உள்ளனர்.