நெல்லையில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

ஊதிய உயர்வை அமல்படுத்த கோரி நெல்லையில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-12-14 22:45 GMT
நெல்லை,

தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு புதிய ஊதிய உயர்வை அமல்படுத்த வேண்டும், அரசு போக்குவரத்து கழக வரவு-செலவு கணக்குகளை அரசு ஏற்க வேண்டும், ஓய்வு பெறும்போது பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து போக்குவரத்து கழக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி ஒவ்வொரு மண்டலம் சார்பில் அந்தந்த பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு போராட்டம் நடந்தது. நெல்லை மண்டலம் சார்பில் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் அலுவலகம் முன்பு நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது.

கோரிக்கைகளை வலியுறுத்தி...

தொ.மு.ச. பொதுச்செயலாளர் தர்மன் தலைமை தாங்கினார். பெருமாள், ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு. நெல்லை மாவட்ட செயலாளர் மோகன் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

தொழிற்சங்க பிரதிநிதிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். போராட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் முருகன், மகாவிஷ்ணு, முருகேசன், பாலசுப்பிரமணியன், ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்