லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்: தம்பி கண் முன்னே அண்ணன் பலியான பரிதாபம்

பாளையங்கோட்டையில் லாரியும், மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்ட விபத்தில் தம்பி கண் முன்னே அண்ணன் பரிதாபமாக இறந்தார்.

Update: 2017-12-14 23:00 GMT
நெல்லை,

பாளையங்கோட்டை பரிசுத்த ஆவி தெருவை சேர்ந்தவர் வேம்பு(வயது 63). இவருடைய தம்பி கருப்பசாமி(60). இவர்கள் தங்க நகை பட்டறை வைத்து தொழில் செய்து வந்தனர். வேம்புவின் உறவினர் வீடு, பாளையங்கோட்டை அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் உள்ளது. அவரை பார்ப்பதற்காக வேம்புவும், அவருடைய தம்பி கருப்பசாமியும் ஒரே மோட்டார் சைக்கிளில் நேற்று காலை சென்றனர். மோட்டார் சைக்கிளை கருப்பசாமி ஓட்டினார்.

பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை அரசு சட்டக்கல்லூரி பகுதியில் சென்றபோது, பின்னால் சென்ற ஒரு லாரி மோட்டார் சைக்கிளை முந்த முயன்றது. அப்போது மோட்டார் சைக்கிளும், லாரியும் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன.

இதில் சம்பவ இடத்திலேயே வேம்பு பரிதாபமாக உயிரிழந்தார். கருப்பசாமி பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினார். அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாபுனி வழக்குப்பதிவு செய்து, தூத்துக்குடியை சேர்ந்த லாரி டிரைவர் செல்லையாவை கைது செய்தனர்.

தம்பி கண் முன்னே அண்ணன் விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்