அரசியலில் ஈடுபடுவது குறித்து அறிவிக்காததால் விரக்தி: ரஜினி ரசிகர் விஷம் குடித்தார்

அரசியலில் ஈடுபடுவது குறித்து ரஜினி அறிவிக்காததால் விரக்தி அடைந்த ரஜினி ரசிகர் விஷம் குடித்தார். அவருக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2017-12-14 23:15 GMT
சேலம்,

சேலம் அழகாபுரம் பாறைவட்டம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை என்ற ரஜினி புரூஸ்லி (வயது 45). கூலித்தொழிலாளி. இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், திவ்யா என்ற மகளும், வசீகரன் என்ற மகனும் உள்ளனர். ஏழுமலை தீவிர ரஜினி ரசிகர் ஆவார். அதன் காரணமாக தனது பெயரை ரஜினி புரூஸ்லி என்று மாற்றம் செய்து கொண்டார்.

மேலும் தனது பகுதியில் ‘நாட்டுக்கொரு நல்லவன்‘ என்ற பெயரில் ரஜினி ரசிகர் மன்றம் தொடங்கி அதற்கு தலைவராகவும் உள்ளார்.

கடந்த 12-ந் தேதி ரஜினிகாந்த் பிறந்தநாள் ஆகும். அன்றைய தினத்தில், அவர் தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று ஏழுமலை ஆர்வமாக இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை என்பதால் விரக்தியில் இருந்த ஏழுமலை நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பூச்சிமருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.

வெளியில் சென்றிருந்த அவரது மனைவி மகேஸ்வரி வீடு திரும்பியபோது, அங்கு மயங்கி கிடந்த கணவர் ஏழுமலையை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு ஏழுமலைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அழகாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏழுமலையை, ரஜினி ரசிகர் மன்றத்தினர் பார்த்து ஆறுதல் கூறினர். 

மேலும் செய்திகள்