ரூ.35 லட்சம் ஜவுளி பண்டல்களை கடத்தி விற்பனை செய்ய முயற்சி டிரைவர்கள் உள்பட 8 பேர் கைது

ஓமலூர் அருகே, ரூ.35 லட்சம் மதிப்புள்ள ஜவுளி பண்டல்களை கடத்தி விற்க முயன்றதாக லாரி டிரைவர்கள் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். 3 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2017-12-14 23:00 GMT
ஓமலூர்,

சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்தவர் ராஜீ (வயது 49), லாரி உரிமையாளர். இவருடைய லாரியில் டிரைவர்களாக வேலூரைச் சேர்ந்த குணசேகரன் (48), நாமக்கல் மாவட்டம் மொளசியைச் சேர்ந்த பழனிவேல் (49) ஆகியோர் வேலைபார்த்து வருகின்றனர்.

பல்லடத்தில் இருந்து கடந்த 12-ந்தேதி லாரியில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள ஜவுளி பண்டல்களை ஏற்றிக்கொண்டு குணசேகரனும், பழனிவேலும் சங்ககிரி வந்தனர். பின்னர் சங்ககிரியில் இருந்து நேற்று முன்தினம் காலை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நோக்கி லாரியில் புறப்பட்டனர். மாலையில் ஓமலூர் அருகே முத்துநாய்க்கன்பட்டி பகுதிக்கு வந்ததும் லாரியை ரோடு ஓரத்தில் நிறுத்தினர். அங்கேயே லாரி நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தது.

அந்த லாரியில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு உள்ளது. அந்த கருவி மூலம் லாரி முத்துநாய்க்கன்பட்டி அருகே நின்று கொண்டிருந்ததை ராஜீ தெரிந்து கொண்டார். நீண்ட நேரம் லாரி நின்றதை அறிந்த அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே செல்போன் மூலம் லாரி டிரைவர்களை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் டிரைவர்களின் செல்போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து ராஜீ ஓமலூர் வந்து போலீசில் புகார் செய்தார்.

இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவலிங்கம், செல்வம் மற்றும் போலீசார், லாரி நிறுத்தப்பட்டு இருந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது ராஜீயின் லாரியில் ஏற்றப்பட்டு இருந்த ஜவுளி பண்டல்களை அருகில் நின்ற மற்ற 2 லாரிகளுக்கு ஏற்றிக்கொண்டு இருந்தனர். போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். ஆனால் போலீசார், அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.

அந்த கும்பலில் குணசேகரன், பழனிவேல், சென்னிமலையைச் சேர்ந்த விஜயகுமார் (34), ஈரோடு வல்லரசன்பட்டியைச் சேர்ந்த முரளிபாபு (48), சேலம் அன்னதானப்பட்டியைச் சேர்ந்த சீனிவாசன் (43), ஓமலூரைச் சேர்ந்த சுந்தர்ராஜன் (49), மல்லூர் பி.மேட்டூரைச் சேர்ந்த சேகர் (43), அன்னதானப்பட்டியைச் சேர்ந்த பாஸ்கர் (37) ஆகிய 8 பேர் இருந்தனர்.

ஜவுளி பண்டல்களை கடத்தி பெங்களூருக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது. இதையடுத்து 8 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

கைதான விஜயகுமார் நூல் வாங்கி விற்பதில் அனுபவம் வாய்ந்தவர். லாரியில் கொண்டு வரப்பட்ட ஜவுளி பண்டல்களை அவர் மூலம் விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்தனர். இதற்காக முரளிபாபு, சீனிவாசன், சுந்தர்ராஜன் ஆகியோரை பயன்படுத்த திட்டம் தீட்டினார்கள். இதையொட்டி சேலம் செவ்வாய்ப்பேட்டையில் இருந்து 2 லாரிகளை வாடகைக்கு எடுத்தனர். அந்த லாரிகளை ஓட்டிக்கொண்டு சேகர், பாஸ்கர் ஆகியோர் அங்கு வந்தனர்.

பல்லடத்தில் இருந்து ஜவுளி பண்டல்களுடன் வந்த லாரியை முத்துநாய்க்கன்பட்டியில் நிறுத்தி விட்டு அதில் இருந்த ஜவுளி பண்டல்களை மற்ற 2 லாரிகளில் ஏற்றி கடத்த முயன்றபோது போலீசாரிடம் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து ரூ.35 லட்சம் மதிப்புள்ள ஜவுளி பண்டல்களையும், ரூ.25 லட்சம் மதிப்புள்ள 3 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவம் ஓமலூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்