சாலை விரிவாக்க பணிக்காக ரோட்டோரம் உள்ள 75 ஆண்டு பழமையான கோவில் இடித்து அகற்றம்

சாலை விரிவாக்க பணிக்காக ரோட்டோரம் உள்ள 75 ஆண்டு பழமையான கோவில் இடித்து அகற்றப்பட்டது.

Update: 2017-12-14 23:00 GMT
அந்தியூர்,

அந்தியூரை அடுத்த ஆப்பக்கூடல் அருகே உள்ளது கிருஷ்ணா நகர் பிரிவு. இந்த பகுதியில் 75 ஆண்டுகள் பழமையான பிரம்மாத்தாள் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அந்தியூர், ஆப்பக்கூடல், கரட்டுப்பாளையம், ஓசைப்பட்டி, புதுப்பாளையம், வேம்பத்தி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் வந்து அம்மனை வழிபட்டு செல்வார்கள்.

இந்த நிலையில் ஆப்பக்கூடலில் இருந்து அந்தியூர் வரை உள்ள ரோட்டை விரிவுபடுத்த நெடுஞ்சாலைத்துறையினர் முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து ரோட்டோரம் இருந்த ஆக்கிரமிப்புகள் மற்றும் கட்டிடங்களை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும் ஆப்பக்கூடல்- அந்தியூர் ரோட்டில் கிருஷ்ணா நகர் பிரிவு பகுதியில் ரோட்டோரம் இருந்த பிரம்மாத்தாள் கோவிலை இடித்து அகற்றவும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் முடிவு எடுக்கப்பட்டது.

இதையடுத்து கோவிலை இடித்து அகற்றுவதற்கான சமாதான பேச்சுவார்த்தை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பவானி தாலுகா அலுவலகத்தில் நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் வருவாய்த்துறை அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதில் கோவிலை இடித்து அகற்ற பக்தர்கள் சம்மதம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் பிரம்மாத்தாள் கோவிலை இடித்து அகற்ற பவானி நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் ரமேஷ் தலைமையில் பணியாளர்கள் பொக்லைன் எந்திரத்துடன் அங்கு வந்தனர். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் கோவிலை இடிக்கும் பணி தொடங்கியது. இதுபற்றி தெரிய வந்ததும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து பிரம்மாத்தாள் சிலையை எடுத்து சென்று அருகில் இருந்த மற்றொரு இடத்தில் பத்திரமாக வைத்தனர்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கூறுகையில், ‘எங்கள் பகுதியை சேர்ந்தவர்கள் தங்கள் குடும்பத்தில் திருமணம் நடக்க, புதிதாக வீடு கட்ட, இடம் வாங்க, உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல மற்றும் எந்தவித சுபகாரியங்கள் என்றாலும் இந்த கோவிலுக்கு வந்து பூ கட்டிப்போட்டு அம்மனிடம் அருள்வாக்கு கேட்போம். அருள்வாக்கு கிடைத்தால்தான் மேற்கொண்டு எங்களுடைய காரியங்களை செய்வோம்.

அதுமட்டுமின்றி நாங்கள் நினைத்தது நிறைவேறினால் பிரம்மாத்தாளுக்கு பட்டுச்சேலை, அலங்கார பொருட்கள் மற்றும் ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடனை செலுத்துவோம். இவ்வளவு சக்திவாய்ந்த இந்த கோவில் இடிக்கப்படுவது எங்களுக்கு மன வருத்தத்தை அளித்து உள்ளது,’ என்றனர். இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அந்தியூர், ஆப்பக்கூடல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அந்தியூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்