ஈரோட்டில் போக்குவரத்து கழக ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

ஈரோட்டில் போக்குவரத்து கழக ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2017-12-14 23:00 GMT
ஈரோடு,

போக்குவரத்து கழகத்தின் வரவு-செலவு கணக்கை ஊழியர்களுக்கு தெரிவிக்க வேண்டும். ஊழியர்களின் பணத்தை போக்குவரத்து கழகம் நடத்துவதற்கு பயன்படுத்தக்கூடாது. ஓய்வு பெற்றவுடன் பணப்பலன்களை வழங்க வேண்டும். ஓய்வூதியர்களின் நிலுவைத்தொகையை உடனடியாக கொடுக்க வேண்டும். மற்ற துறைகளுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். 1-4-2003-க்கு பிறகு பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்ய வேண்டும். புதிய ஊழியர்களுக்கு பணி எண் வழங்கி நிரந்தரப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் மாநிலம் முழுவதும் 2 நாள் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று மண்டல அலுவலகங்களில் போராட்டம் தொடங்கியது. ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக மண்டல அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு கூட்டமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் என்.முருகையா தலைமை தாங்கினார். இதில் தொழிற்சங்க பொறுப்பாளர்கள் குழந்தைசாமி (எல்.பி.எப்.), சண்முகம் (எச்.எம்.எஸ்.), முகமதுரபீக் (டி.டி.எஸ்.எப்.), சண்முகம் (டி.எம்.டி.எஸ்.பி.), முருகேஷ் (பி.டி.எஸ்.), சுகுமார் (ஏ.ஐ.டி.யு.சி.), ஜான்சன்கென்னடி (சி.ஐ.டி.யு.), ரவி (ஐ.என்.டி.யு.சி.) ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் என்.முருகையா கூறும்போது, “எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இந்த போராட்டம் தொடர்ந்து 48 மணிநேரம் நடத்தப்படுகிறது. அதன்பின்னரும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும்”, என்றார். இதில் தொழிற்சங்க பொறுப்பாளர்கள், போக்குவரத்துக்கழக டிரைவர்கள், கண்டக்டர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் உள்பட ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்