மணப்பாறையில் சுகாதாரமின்றி இருந்த வீட்டுக்கு சீல் வைப்பு கலெக்டர் அதிரடி நடவடிக்கை
மணப்பாறையில் ஆய்வு நடத்திய கலெக்டர் சுகாதாரமின்றி இருந்த வீட்டுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார்.
மணப்பாறை,
மணப்பாறை நகரின் பல்வேறு இடங்களில் திருச்சி கலெக்டர் ராஜாமணி நேற்று காலை முதல் மதியம் வரை ஆய்வு மேற்கொண்டார். அப்போது நகர பகுதி தூய்மையாக வைக்கப்பட்டுள்ளதா? மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்பட்டுள்ளதா என்பதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் சாலையில் உள்ள தனியார் பள்ளியின் எதிரே ஒரு வீட்டில் இனிப்பு மற்றும் காரவகைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றது. அந்த வீட்டிற்கு சென்று ஆய்வு மேற்கொண்ட போது சுகாதாரமின்றி இருப்பது தெரியவந்ததை அடுத்து அந்த வீட்டிற்கு சீல் வைத்திட நகராட்சி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து நகராட்சி சுகாதார ஆய்வாளர் சம்பந்தப்பட்ட வீட்டை பூட்டி சீல் வைத்தார். தொடர்ந்து ராஜீவ்நகர் சாலையில் ஆய்வை மேற்கொண்ட கலெக்டர் பின்னர் மணப்பாறை நகராட்சியின் தாய்கிராமமான செவலூர் பகுதிக்கு சென்றார்.
வீடுகளுக்கு சென்று மக்கள் வீடுகளை தூய்மையாக வைத்துள்ளனரா என பார்வையிட்ட பின் அடிப்படை வசதிகள் குறித்து மக்களிடம் கேட்டறிந்தார். அப்போது கலெக்டரிடம் பொதுமக்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பதிவு செய்தனர். மணப்பாறை நகராட்சியின் தாய் கிராமம் என்று பெயரளவில் சொல்லப்படுகின்றதே தவிர எந்தவித அடிப்படை வசதிகளும் கிடையாது. சாலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட வேகமாக செல்ல முடியாத நிலை இருப்பதை நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் சுகாதாரம் என்பது கேள்விக்குறியாகும் நிலையில் தான் உள்ளது. துப்புரவு பணியாளர்கள் வருவது என்பது அரிதான காரியமாக உள்ளது. முறையாக தண்ணீர் வினியோகம் செய்யப்படுவதிலை. தெருவிளக்கு வசதியில்லை. மும்முனை மின்சாரம் கேட்டு பலமுறை வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறினர்.
இதைக் கேட்ட கலெக்டர் மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் காலதாமதமின்றி உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சாலை மற்றும் தெருவிளக்கு உடனடியாக சரிசெய்து தரப்படும் என்று கூறினார். இந்த ஆய்வின் போது மணப்பாறை தாசில்தார் தனலெட்சுமி, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) மனோகரன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் தீபன் சக்கரவர்த்தி, வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணவேணி, கிராம நிர்வாக அதிகாரி பாக்கியம் உள்ளிட்ட பலரும் உடன் சென்றனர்.