ரிக்ஷா தொழிலாளி தீக்குளிப்பு கஞ்சா விற்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால் விபரீத முடிவு

ஸ்ரீரங்கம் கோவில் முன்பு தீக்குளித்த ரிக்ஷா தொழிலாளிக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கஞ்சா விற்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால் தீக்குளித்ததாக அவர் கூறினார்.

Update: 2017-12-14 23:15 GMT

ஸ்ரீரங்கம்,

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் புதுத்தெருவை சேர்ந்தவர் அமாவாசை (வயது 63). இவரது மனைவி பத்மா. இவர்களுக்கு ரவிச்சந்திரன் என்கிற மகனும், வெள்ளையம்மாள் என்கிற மகளும் உள்ளனர். அமாவாசை ஸ்ரீரங்கம் பகுதியில் ரிக்ஷா ஓட்டி வருகிறார். பத்மா ஸ்ரீரங்கத்தில் தள்ளுவண்டியில் கம்பங்கூழ் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் ஒரே மகனான ரவிச்சந்திரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருநங்கையாக மாறிவிட்டார். வெள்ளையம்மாள் திருமணமாகி லால்குடியில் கணவருடன் வசித்து வருகிறார்.

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக அமாவாசை குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார். ஆனாலும் வீட்டிற்கு அவ்வப்போது சென்று வருவது வழக்கம். இந்தநிலையில் அமாவாசை நேற்று காலை அம்மா மண்டபம் அருகே நின்று கொண்டிருந்த தனது ரிக்ஷாவில் பெட்ரோல் இருந்த கேனை எடுத்துக்கொண்டு, ஸ்ரீரங்கம் கோவிலின் ராஜகோபுரம் அருகே நடுரோட்டிற்கு வந்தார்.

பின்னர் அமாவாசை பெட்ரோலை தனது உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டார். இதனால் தீ உடல் முழுவதும் பரவியதால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்த அமாவாசை தன்னை காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்... என்று அலறியபடியே ராஜகோபுரம் நோக்கி ஓடினார். ஆனால் சிறிது தூரம் செல்வதற்குள் ஓட முடியாமல் தடுமாறி அமாவாசை கீழே விழுந்தார். இந்த காட்சியை கண்ட ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். பின்னர் அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து அமாவாசை உடலில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க முயன்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த ஸ்ரீரங்கம் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். பின்னர் அமாவாசையை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் ஸ்ரீரங்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மருத்துவமனையில் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் அமாவாசை நிருபர்களிடம் உருக்கமாக கூறியதாவது:–

என்னுடன் சேர்ந்து ரிக்ஷா ஓட்டும் தொழிலாளிகள் சிலர் அதே பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நான் ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால் இதுவரைக்கும் அவர்கள் மீது போலீசார் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து அறிந்ததும் கஞ்சா விற்பவர்கள் ஆத்திரமடைந்து என்னை கடந்த சில நாட்களுக்கு முன்பு சரமாரியாக தாக்கினர்.

கஞ்சா விற்பனை செய்வது குறித்து மீண்டும் போலீசாரிடம் புகார் கொடுத்தால், என்னை கொன்று விடுவதாகவும் கூறி அவர்கள் மிரட்டி சென்றனர். இதனால் மனமுடைந்த நான் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டால் தான் போலீசார் கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்று தீக்குளித்தேன்.

இவ்வாறு அவர் உருக்கமாக கூறினார்.

இது தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்