பாராளுமன்றத்தில் “புயல் நிவாரணம் குறித்து அழுத்தமாக குரல் கொடுப்போம்” ராகுல்காந்தி பேச்சு

‘‘புயல் நிவாரணம் குறித்து பாராளுமன்றத்தில் அழுத்தமாக குரல் கொடுப்போம்’’ என்று புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி ராகுல்காந்தி பேசினார்.

Update: 2017-12-14 23:15 GMT

நாகர்கோவில்,

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக தேர்வு செய்யப்பட்ட ராகுல் காந்தி, ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற டெல்லியில் இருந்து விமானம் மூலம் பகல் 11.30 மணிக்கு திருவனந்தபுரம் வந்தார். அங்கிருந்து காரில் மீனவ பகுதியான பூந்துறைக்கு சென்றார்.

அப்போது, சோகம் தாங்காமல் மீனவ பெண்கள் கதறினர். சில பெண்கள் ராகுல்காந்தியின் கைகளை பற்றிக்கொண்டு, மாயமான மீனவர்களை மீட்டுத்தர நடவடிக்கை எடுங்கள்’’ என்று கேட்டுக்கொண்டனர். பின்னர் அங்கிருந்து கார் மூலம் பகல் 12 மணிக்கு ராகுல் காந்தி விழிஞ்ஞம் சென்றார். அங்கும் மீனவ மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

அதை தொடர்ந்து ராகுல் காந்தி பேசுகையில், மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும். அப்போது மீனவர்களுக்கு என தனி அமைச்சகம் உருவாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். புயலால் பாதிப்புக்குள்ளான உங்களை உடனடியாக சந்திக்க முடியவில்லை. அதற்காக மன்னிப்பு கோருகிறேன் என்றார்.

பின்னர் குமரி மாவட்டத்துக்கு செல்ல 1 மணிக்கு ஹெலிகாப்டரில் ராகுல்காந்தி புறப்பட்டார். அவர் குமரி மாவட்டத்தில் கடற்கரை பகுதியான தூத்தூருக்கு 1.45 மணிக்கு வந்தார். அங்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்கிருந்து காரில் புறப்பட்ட ராகுல்காந்தி, சின்னத்துறை மீனவ கிராமத்துக்கு 2 மணிக்கு சென்றடைந்தார். புயலால் பாதிக்கப்பட்ட 8 மீனவ கிராமங்களை சேர்ந்தவர்களை ராகுல்காந்தி சந்தித்து பேசினார். அப்போது பெண்கள் கதறி அழுதவாறு, கடலில் மீன்பிடிக்க சென்று புயலால் காணாமல் போன மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒட்டுமொத்தமாக கேட்டுக்கொண்டனர். அவர்களுக்கு ராகுல்காந்தி ஆறுதல் கூறினார்.

பின்னர் ராகுல் காந்தி பேசியதாவது:–

குஜராத் மாநில தேர்தல் பிரசாரம் திட்டமிடப்பட்டு இருந்ததால் உடனே இங்கு வரமுடியவில்லை. அதற்காக வருந்துகிறேன். உங்களுக்கு எந்தெந்த வகையில் நாங்கள் உதவி செய்ய முடியுமோ அதை நிச்சயம் செய்ய தயாராக இருக்கிறோம். உங்களுடைய கோரிக்கைகளை ஆணித்தரமாக ஆட்சியாளர்களிடம் வலியுறுத்தி பெற்று தருவோம்.

புயல் நிவாரணம் குறித்து பாராளுமன்றத்தில் அழுத்தமாக குரல் கொடுப்போம். மீனவர்கள் போலவே விவசாயிகளும் ஒகி புயலால் பயிர்கள் சேதமடைந்து பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கும் எந்தவிதத்தில் எல்லாம் உதவ முடியுமோ அந்த வகையில் உதவ நாங்கள் நிச்சயம் முயற்சி எடுப்போம்.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

முன்னதாக பேச்சை தொடங்கும் போது ராகுல்காந்தி ‘வணக்கம்’ என தமிழில் கூறி பேசத்தொடங்கினார். ஆங்கிலத்தில் அவர் பேசிய உரையை திருநாவுக்கரசர் தமிழில் மொழி பெயர்த்தார். பின்னர் ராகுல் காந்தி காரில் தூத்தூர் சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டரில் திருவனந்தபுரம் சென்றடைந்தார்.

தூத்தூரை சேர்ந்த ஸ்டெல்லா, ராகுல் காந்தியிடம் கதறி அழுதவாறு கூறுகையில், கடந்த மாதம் 21–ந் தேதி படகில் எனது கணவர், இரட்டை மகன்கள், உறவினர்கள் உள்பட 9 பேர் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். ஆனால் இதுவரை அவர்கள் கரை திரும்பவில்லை. புயலில் சிக்கி என்ன ஆனார்கள்? என்றே தெரியவில்லை. புயல் வீசிய ஒன்றிரண்டு நாட்களில் அவர்களை அரசு தேடி இருந்தால் கண்டுபிடித்து இருக்கலாம். குடும்பத்தினரை இழந்து தவிக்கும் எங்களுக்கு அரசு பணம் தந்து என்ன பயன்? அவர்கள் மீன்பிடிக்க சென்ற படகும் கடனில் வாங்கினோம். தற்போது எனது கணவரையும், 2 மகன்களையும் பறிகொடுத்து தவிக்கிறேன். இனி என் மகளை எப்படி படிக்க வைப்பேன்? படகுக்கு வாங்கிய கடனை எப்படி அடைப்பேன்? என்றார்.

நீரோடி கிராமத்தை சேர்ந்த சாந்தி கூறுகையில், எனது கணவர் உள்பட 13 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். புயலில் சிக்கிய அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. எனது கணவரை தவிர சொந்தம் என்று யாரும் எனக்கு இல்லை. அவரை இழந்த நானும், எனது பிள்ளைகளும் தற்போது தெருவில் நிற்கிறோம் என்று உருக்கமாக கூறினார்.

மேலும் செய்திகள்