கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் குமரி மாவட்டத்தில் 13 இடங்களில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில்,
போக்குவரத்து கழகங்களின் வரவுக்கும், செலவுக்கும் உள்ள வித்தியாசத்தை சரிசெய்ய வேண்டும், ஓய்வு பெற்றவுடன் பணப்பலன்கள், ஓய்வூதிய நிலுவைகளை உடனே வழங்க வேண்டும், பிற துறை ஊழியர்களுக்கு இணையாக போக்குவரத்து கழக ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்குதல் அவசியம், 1–4–2003–க்கு பிறகு பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்புநிதி, ஓய்வூதியம், பணிக்கொடை ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி டிசம்பர் 14–ந் தேதி மற்றும் 15–ந் தேதி ஆகிய 2 நாட்கள் தமிழகம் முழுவதும் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் தங்களது காத்திருப்பு போராட்டத்தை நேற்று காலை தொடங்கினர்.
இதே போல் குமரி மாவட்டத்திலும் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஓய்வுபெற்ற தொழிலாளர்களும் பங்கேற்றனர்.
நாகர்கோவில் ராணிதோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனை வளாகத்தில் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
போராட்டத்தில் தொ.மு.ச. பொதுச்செயலாளர் சிவன்பிள்ளை, பொருளாளர் கனகராஜ், சி.ஐ.டி.யு. பொதுச்செயலாளர் சங்கர நாராயணபிள்ளை, துணை பொதுச்செயலாளர் ஸ்டான்லி ராபர்ட், எச்.எம்.எஸ். நிர்வாகிகள் லட்சுமணன், கண்ணன், ஈஸ்வரபிரசாத், ஐ.என்.டி.யு.சி. நிர்வாகி ராஜா, ஏ.ஐ.டி.யு.சி. நிர்வாகி தயானந்தன், எம்.எல்.எப். நிர்வாகி சந்திரன் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர் சம்மேளனம், ஏ.ஏ.எல்.எப். உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
போராட்டம் தொடர்பாக தொ.மு.ச. பொருளாளர் கனகராஜ் கூறியதாவது:–
தமிழக அரசு அனைத்து துறை தொழிலாளர்களுக்கும் சம்பள உயர்வு வழங்கிவிட்டு போக்குவரத்து தொழிலாளர்களை மட்டும் ஏமாற்றி வருகிறது. 31–8–2016–ல் சம்பள ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது. அதைத் தொடர்ந்து 1–9–2016 முதல் புதிய சம்பள உயர்வு வழங்கி இருக்க வேண்டும். ஆனால் பலகட்ட போராட்டங்கள் நடத்தியும் சம்பள உயர்வு வழங்குவதில் கால தாமதம் செய்து வருகிறது.
பல மாவட்டங்களில் தொழிலாளர்கள் பஸ் இயக்குவதை நிறுத்தி இருக்கிறார்கள். எனவே விரைவில் பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனில் குமரி மாவட்டத்திலும் பஸ் இயக்குவதை நிறுத்தி போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுபோல் மீனாட்சிபுரத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை, செட்டிகுளத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை உள்பட குமரி மாவட்டத்தில் 13 இடங்களில் போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.