புயலில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் பா.ஜனதா நிர்வாகிகள் மனு

புயலில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில், பி.எம்.எஸ். , பா.ஜனதா நிர்வாகிகள் மனு

Update: 2017-12-14 22:45 GMT

நாகர்கோவில்,

பி.எம்.எஸ். மாநில பொதுச்செயலாளர் முருகேசன் தலைமையில் பா.ஜனதா மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன், துணை தலைவர் முத்துராமன், இந்து முன்னணி மாவட்ட தலைவர் மிசா சோமன் உள்ளிட்டோர் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–

‘ஒகி‘ புயலால் குமரி மாவட்டம் வரலாறு காணாத அளவில் பாதிப்படைந்துள்ளது. புயலில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்குவதோடு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். கால்நடைகள் இழப்பை கணக்கெடுத்து இழப்பீடு வழங்குங்கள். வீடுகளை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ இழந்தவர்களுக்கு சதுர அடிக்கு ரூ.3 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்குதல் அவசியம். மலைவாழ் மக்களுக்கு அவர்களது வசிப்பிடங்களிலேயே வீடு கட்ட ஆவண செய்ய வேண்டும். பொது கட்டிடங்கள், வழிபாட்டுதலங்கள், சாலைகள், குளம் மற்றும் ஆறுகளின் கரைகள் போன்றவற்றை போர்க்கால அடிப்படையில் செப்பனிட வேண்டும். நியாயமான இந்த கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றக்கோரி போராட்டம் நடத்தியும், மனு கொடுத்தும் அரசு எந்த உத்தரவாதமும் அளிக்காமல் அலட்சியமாக உள்ளது. எனவே இதை கண்டித்து 15–12–2017–ந் தேதி(இன்று) மாவட்டம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்