காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கிய தோகைமலை ராணுவ வீரர் மனைவி, உறவினர்கள் சோகம்

காஷ்மீரில் பனிச்சரிவில் தோகைமலை ராணுவ வீரர் சிக்கியதால் அவரது மனைவி, உறவினர்கள் சோகமடைந்துள்ளனர்.

Update: 2017-12-13 22:45 GMT
தோகைமலை,

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடும் குளிர் நிலவி வருகிறது. பனிப்பொழிவும் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் அங்கு பந்திப்போரா மாவட்டம் குரெஸ் பகுதியில் எல்லைகட்டுப்பாட்டு கோடு அருகே கடந்த 11-ந்தேதி பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் மலையில் இருந்து பனிப்பாறைகள் சரிந்து எல்லையோர பக்தூர் ராணுவ முகாம் மீது விழுந்தது. இதில் பாதுகாப்பு பணியில் இருந்த 5 ராணுவ வீரர்கள் சிக்கினர். அவர்களது நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை.

இந்த நிலையில் பனிச்சரிவில் சிக்கிய 5 பேரில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர் எனவும், அவர் கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கொசூர் பக்கம் களத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த மூர்த்தி (வயது33) எனவும் தெரியவந்துள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

மூர்த்தியின் மனைவி தமிழரசி (31). இவரது செல்போன் எண்ணிற்கு நேற்று பகல் 11 மணி அளவில் காஷ்மீர் ராணுவ முகாமில் இருந்து ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இந்தியில் பேசியதால் தமிழ் மொழியில் பேசுமாறு அவர் கூறினார். சிறிது நேர தாமதத்திற்கு பிறகு ராணுவ முகாமில் இருந்து செல்போன் அழைப்பு மீண்டும் வந்தது.

அப்போது மறுமுனையில் பேசியவர், “மூர்த்தி பணியில் ஈடுபட்டிருந்த போது பனிச்சரிவில் சிக்கிக்கொண்டார். அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளோம். அவருடன் மேலும் 4 பேர் சிக்கியிருக்கின்றனர். 5 பேரையும் மீட்க பணிகள் நடந்து வருகிறது” என்று கூறியிருக்கிறார்.

இந்த தகவலை கேட்ட தமிழரசி அதிர்ச்சியடைந்தார். கணவரின் நிலை என்ன ஆனது என்று தெரியாததால் கதறி அழுதார். மேலும் தனது உறவினர்களுக்கும் அவர் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் அவரது வீட்டிற்கு உறவினர்கள் திரண்டு வந்தனர். மூர்த்தியின் தந்தை நாச்சி, தாய் வெள்ளையம்மாள் ஆகியோர் கண்ணீர் விட்டு அழுதனர். அவரது வீட்டின் முன்பு உறவினர்களும், அதேபகுதியை சேர்ந்த பொதுமக்களும் சோகத்துடன் திரண்டு நின்றனர்.

இதற்கிடையில் வருவாய்த்துறை அதிகாரிகளும் விரைந்து வந்தனர். மூர்த்தியின் விவரங்களை தமிழரசி மற்றும் அவரது உறவினர்களிடம் பெற்றுச்சென்றனர். ராணுவவீரர் மூர்த்தி பனிச்சரிவில் சிக்கியதால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது. 

மேலும் செய்திகள்