விக்கிரவாண்டி அருகே போலீஸ் போல் நடித்து வாலிபர்களிடம் ரூ.10 லட்சம் கொள்ளை

விக்கிவாண்டி அருகே போலீஸ் போல் சீருடைய அணிந்து வந்து நடித்து வாலிபர்களிடம் ரூ.10 லட்சம் கொள்ளையடித்து சென்ற 4 மர்மநபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Update: 2017-12-13 22:45 GMT

விக்கிரவாண்டி,

ராமநாதபுரம் அருகே தொண்டி கிராமத்தை சேர்ந்தவர் அஜ்மீர் (வயது 23). சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் என்ஜினியரீங் படித்து வருகிறார். இவர் தனது தங்கையின் திருமண செலவுக்காக சென்னையை சேர்ந்த ஒருவரிடம் ரூ.10 லட்சம் கடன் வாங்க தனது நண்பர்களான அதே ஊரை சேர்ந்த சின்னதுரை, ரபீக், சித்தீக், சஜத் ஆகியோருடன் செல்ல முடிவு செய்தார்.

அதன்படி சின்னத்துரைக்கு சொந்தமான காரில் அவர்கள் 5 பேரும் சென்னைக்கு புறப்பட்டனர். அங்கு சென்று பணம் வாங்கியதும் அதே காரில் அவர்கள் 5 பேரும் நேற்று முன்தினம் இரவு ஊர் திரும்பி கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் விக்கிரவாண்டி சோதனைச்சாவடி அருகே வந்த போது, அவர்கள் இயற்கை உபாதை கழிப்பதற்காக காரை சாலையோரத்தில் நிறுத்தினர்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று திடீரென அவர்கள் அருகே வந்து நின்றது. பின்னர் காரில் இருந்து போலீஸ் சீருடையில் இறங்கி வந்த மர்ம நபர்கள் 4 பேர், அஜ்மீர் உள்ளிட்ட 5 பேரிடம் யார் நீங்கள், எங்கிருந்து வருகிறீர்கள் என கூறி போலீசார் போல் விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து அவர்கள் காரில் ஏதேனும் பொருட்களை கடத்தி வருகிறீர்களா? என்று கூறியபடி காரில் சோதனை நடத்தினர். அப்போது காரில் அஜ்மீர் கடனாக வாங்கி வந்த ரூ.10 லட்சம் இருந்ததை அந்த நபர்கள் எடுத்தனர். தொடர்ந்து அவர்கள், அஜ்மீர் உள்ளிட்ட 5 பேருடன் இந்த பணம் யாருடையது, எங்கேயாவது திருடி கொண்டு வருகிறீர்களா? என்று கேட்டு மிரட்டியுள்ளனர்.

பின்னர் அவர்கள், இந்த பணம் குறித்த விவரங்களை எங்களது மேல் அதிகாரிகளிடம் தெரிவித்து பணத்தை வாங்கி செல்லுங்கள் என்று கூறியதோடு, அந்த மர்மநபர்களில் 2 பேர் சின்னதுரை, சஜத் ஆகிய 2 பேரையும் தங்களுடன் அழைத்துக்கொண்டு காரில் புறப்பட்டனர். மீதமுள்ள 2 பேர் அஜ்மீர், ரபீக், சித்திக் ஆகிய 3 பேரையும் சின்னதுரைக்கு சொந்தமான காரில் அழைத்து கொண்டு புறப்பட்டனர்.

இந்த நிலையில் சின்னதுரை, சஜத் ஆகிய 2 பேரையும் அழைத்துக்கொண்டு சென்ற மர்மநபர்களிடம், சின்னதுரை உங்களது அடையாள அட்டையை காட்டுங்கள், நீங்கள் எந்த போலீஸ் நிலையத்தில் வேலை செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மர்மநபர்கள் 2 பேரும் சின்னதுரை, சஜத் ஆகிய 2 பேரையும், உளுந்தூர்பேட்டை அருகே சின்னகுப்பம் கிராமத்தில் இறக்கிவிட்டுவிட்டு அங்கிருந்து காரில் பணத்துடன் சென்றனர்.

இதையடுத்து செய்வது அறியாது தவித்த சின்னதுரை, சஜத் ஆகிய 2 பேரும் திருநாவலூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று நடந்த சம்பவம் குறித்து அங்கிருந்த போலீசாரிடம் தெரிவித்தனர். அதன் பின்னர் தான் போலீஸ் சீருடையில் வந்த 4 பேரும் போலீஸ் போல் நடித்து ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது அவர்களுக்கு தெரியவந்தது.

இதற்கிடையே அஜ்மீர், ரபீக், சித்தீக் ஆகிய 3 பேரையும் அழைத்து சென்ற மர்மநபர்கள், அவர்களை புதுக்கோட்டை அருகே இறக்கி விட்டுவிட்டு காருடன் சென்றது தெரியவந்தது. கொள்ளை சம்பவம் நடைபெற்ற இடம் விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்துக்கு உள்பட இடம் என்பதால், சின்னதுரை, சஜத் ஆகிய 2 பேரையும் அந்த போலீஸ் நிலையத்துக்கு திருநாவலூர் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்கள் அளித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இது குறித்த தகவலின் பேரில் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், விரைந்து வந்து சின்னதுரை, சஜத் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தினார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்