திருப்பூரில் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

திருப்பூர் பாரப்பாளையம் பகுதியில் உள்ள ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2017-12-13 22:00 GMT

திருப்பூர்,

திருப்பூர் ஊத்துக்குளி செல்லும் ரோடு பாரப்பாளையம் பகுதியில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளையின் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏ.டி.எம். மையத்தை அந்த பகுதியில் உள்ள ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்றுகாலை இந்த ஏ.டி.எம். மையத்தில் உள்ள எந்திரம் உடைந்திருப்பதை அருகில் உள்ள கடைக்காரர்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் உடனடியாக திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த தகவலின்படி அந்த பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும், அங்கு கிடந்த தடயங்களை போலீசார் சேகரித்து ஆய்வு செய்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில், நேற்று முன்தினம் நள்ளிரவு யாரோ மர்ம நபர்கள் சிலர் அந்த ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்துள்ளனர். அவர்கள் எந்திரத்தின் பணம் நிரப்பும் பகுதியில் உள்ள ரகசிய எண் இருக்கும் இடத்தை உடைத்துள்ளனர்.

மேலும், எந்திரத்தின் பின்பகுதியிலும் இரும்பு கம்பியை வைத்து உடைக்க முயன்றுள்ளனர். பல முயற்சிகள் மேற்கொண்டும் எந்திரத்தை உடைக்க முடியவில்லை. இதையடுத்து அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றிருந்தது தெரியவந்தது. இதனால், ஏ.டி.எம்.எந்திரத்தில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் தப்பியது.

இதைத்தொடர்ந்து, வங்கி அதிகாரிகள் வடக்கு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏ.டி.எம். மையத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா மற்றும் அருகில் உள்ள கடைகளின் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போதிய அளவு மின் விளக்குகள் இல்லாததும், இரவு நேர காவலர்கள் இல்லாததுமே இந்த கொள்ளை முயற்சிக்கு காரணம் என்று அந்த பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்