சமூக வலைதளங்களில் முதல்–அமைச்சரை விமர்சித்த டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் கைது
சமூக வலைதளங்களில் முதல்–அமைச்சரை விமர்சித்த டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் கைது செய்யப்பட்டார். ஆர்.கே.நகரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது சிக்கினார்.
தேனி,
தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள வாலிப்பாறை கிராமத்தை சேர்ந்தவர் கர்ணன் (வயது 46). அ.தி.மு.க. இலக்கிய அணி ஒன்றிய துணை செயலாளராக உள்ளார். இவர் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் ஆவார்.
கடந்த மாதம் தேனியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தொடர்பாக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை விமர்சித்து வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒரு வீடியோவை கர்ணன் பதிவேற்றம் செய்திருந்தார்.
இதுகுறித்து அ.தி.மு.க. சார்பில் கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த வீடியோவில் இடம்பெற்றிருந்த கர்ணன் மற்றும் வருசநாடு பகுதியை சேர்ந்த கோபி (38), ராம்கி (37), பத்மநாதன் (38) ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையறிந்த அவர்கள் தலைமறைவாகி விட்டனர். சில தினங்களுக்கு முன்பு பத்மநாதன் கைது செய்யப்பட்டார். மற்ற 3 பேரை போலீசார் தேடி வந்தனர். சென்னை ஆர்.கே.நகரில் கர்ணன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் தனிப்படை போலீசார் சென்னை வந்து கர்ணனை கைது செய்து தேனி மாவட்டத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.